வாரணாசியில் வேட்பு மனுவை தாக்கல் செய்த மோடியுடன் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளனர்.
New Delhi: பாஜகவின்(BJP) கூட்டணி கட்சியான அகாலி தள கட்சியின் தலைவர் பிரகாஷ் சிங் பாதலின் காலில் விழுந்து பிரதமர் மோடி ஆசிர்வாதம் பெற்றார். இந்த ஃபோட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து பிரதமர் மோடி(Narendra Modi) மீண்டும் போட்டியிடுகிறார். இதையொட்டி மோடி தனது வேட்புமனுவை வாரணாசி கலெக்டர் அலுவலகத்தில் இன்று தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியின்போது கூட்டணி கட்சி தலைவர்களும் மோடியுடன் இருந்தனர்.
பஞ்சாப் மாநிலத்தில் பாஜக அகாலி தள கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. அக்கட்சியின் தலைவராக 93 வயதாகும் பிரகாஷ் சிங் பாதல் செயல்பட்டு வருகிறார். மூத்த அரசியல்வாதியான அவரது காலில் விழுந்து மோடி இன்று ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்.
இந்த ஃபோட்டோவை மோடி ஆதரவாளர்கள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்த போட்டோவுடன் ராகுல் மற்றும் சோனியா காந்தியின் காலில் விழுந்த தலைவர்களின் போட்டோக்களையும் இணைத்து போஸ்ட்கள் பரப்பப்படுகின்றன.
மரியாதையை பிரதமர் மோடியிடம் இருந்து சோனியாவும், ராகுலும் கற்றுக் கொள்ள வேண்டும் என மோடி ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
இதேபோன்று 92 வயதாகும் பெண்கள் கல்லூரியின் முதல்வர் அன்னபூர்ணா சுக்லா என்பவரின் காலில் விழுந்தும் மோடி ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார். இவர் மோடியின் பெயரை வேட்பாளராக முன்மொழிந்தவர்களில் ஒருவர் ஆவார்.
மோடி வேட்புமனுவை தாக்கல் செய்தபோது, தமிழகத்திலிருந்து துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.