This Article is From Mar 02, 2019

விங் கமாண்டர் அபினந்தன் வருகை குறித்து என்ன சொன்னார் பிரதமர் மோடி?

கடந்த 50 ஆண்டுகள் இல்லாத வகையில் இந்தியா - பாகிஸ்தான் நாடுகள், சென்ற புதன் கிழமை வான் வழி சண்டையில் ஈடுபட்டன.

நேற்று மாலையே அபினந்தன், இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில ஆவண சரிபார்ப்புகள் காரணமாக அவரை ஒப்படைப்பது தள்ளிப் போனது.

ஹைலைட்ஸ்

  • உங்கள் வீரத்தை தேசம் போற்றும், பிரதமர் மோடி ட்வீட்
  • 130 கோடி இந்தியர்களுக்கு நமது ராணுவம்தான் முன்னுதாரணம், மோடி ட்வீட்
  • வாகா எல்லையில் அபினந்தன் பாகிஸ்தானால் ஒப்படைக்கப்பட்டார்
New Delhi:

பாகிஸ்தான் பிடியில் இருந்த இந்திய விமானப்படை போர் விமானி அபினந்தன் வர்தமன், நேற்று இரவு வாகா எல்லையில் பாகிஸ்தானால் ஒப்படைக்கப்பட்டார். வாகா எல்லையில் கூடியிருந்த மக்கள், அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். 

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தாயகத்துக்கு உங்களை வரவேற்கிறேன் விங் கமாண்டர் அபினந்தன்! உங்கள் வீரத்தை நினைத்து இந்த தேசம் பெருமை கொள்கிறது. நமது ராணுவம், 130 கோடி இந்தியர்களுக்கு ஓர் முன்னுதாரணம். வந்தே மாதரம்' என்று உணர்ச்சித் ததும்ப பதிவிட்டிருந்தார். 
 

கடந்த புதன் கிழமை, பாகிஸ்தான் விமானப்படையுடன் சண்டையிட்ட போது, விங் கமாண்டர் அபினந்தன் சென்ற மிக்-21 ரக போர் விமானம், சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால், அபினந்தன் பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட இடத்தில் பாராஷூட் மூலம் தரையிறங்கினார். பாகிஸ்தான் ராணுவம், அவரை கைது செய்தது. இதையடுத்து, அவரை அந்நாட்டு அரசு, நேற்று இரவு 9:20 மணி அளவில் இந்தியாவிடம் ஒப்படைத்தது. வாகா எல்லையில் அவர் ஒப்படைப்பதையொட்டி, அங்கு நடத்தப்படவிருந்த கொடி இறப்பு நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது. 

நேற்று மாலையே அபினந்தன், இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில ஆவண சரிபார்ப்புகள் காரணமாக அவரை ஒப்படைப்பது தள்ளிப் போனது. அவர் வருகையையொட்டி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் ட்விட்டரில் நெகிழ்ச்சியுடன் பதிவுகள் இட்டனர். 

இந்திய விமானப்படையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம், ‘விங் கமாண்டர் அபினந்தன், உங்களை மீண்டும் வரவேற்பதில் மகிழ்ச்சி. உங்களை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம். ஜெய் ஹிந்த்!!!' என்று பதிவிட்டது. 
 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘விங் கமாண்டர் அபினந்தன், உங்கள் மாண்பு, வீரம் என எல்லாம் எங்களை பெருமை கொள்ளச் செய்துள்ளது. மீண்டும் தாயகத்துக்கு உங்களை வரவேற்கிறேன். உங்கள் மீது மட்டற்ற அன்பு' என்று உணர்ச்சிபூர்வமாக பதிவிட்டுள்ளார்.

கடந்த 50 ஆண்டுகள் இல்லாத வகையில் இந்தியா - பாகிஸ்தான் நாடுகள், சென்ற புதன் கிழமை வான் வழி சண்டையில் ஈடுபட்டன. அதில்தான் அபினந்தன், பாகிஸ்தான் தரப்பிடம் சிக்கினார். இதையடுத்து பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், ‘அமைதியை நிலைநாட்டும் நோக்கில் அபினந்தனை நாங்கள் விடுவிக்கிறோம்' என்று பேசினார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்ற சூழல் சற்றுத் தணிந்துள்ளது. 

 

மேலும் படிக்க'திரும்ப வந்தது மகிழ்ச்சி!'- தாயகம் திரும்பியது குறித்து விமானி அபினந்தன் வர்தமன்

.