This Article is From Feb 28, 2019

பிரதமர் மோடி இன்று பாஜக தொண்டர்களுடன் உரையாடுகிறார்... கொதிக்கும் எதிர்கட்சிகள்!

நாட்டின் 21 எதிர்கட்சிகள், ‘அரசியல் ஆதாயத்துக்காக இந்த விவகாரத்தைப் பயன்படுத்துகிறது ஆளுங்கட்சி’ என்று பகிரங்கமாக குற்றம் சாட்டின.

கடந்த பல ஆண்டுகளாக இல்லாத வகையில் இந்தியா பாகிஸ்தான் இடையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

New Delhi:

பிரதமர் நரேந்திர மோடி, இன்று சுமார் 1 கோடி பாஜக தொண்டர்களுடன் வீடியோ மூலம் உரையாற்றுகிறார். 15,000 இடங்களில் இருக்கும் தொண்டர்களிடம் ஒரே நேரத்தில் மோடி உரையாற்ற உள்ளார். இது குறித்து பாஜக தரப்பு, ‘இதுதான் உலகின் மிகப் பெரிய வீடியோ கான்ஃபெரன்ஸாக இருக்கும்' என்றுள்ளது. இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் இந்த வீடியோ கான்ஃபெரன்சிங் நிகழச்சி நடைபெற உள்ளது கவனத்துக்குரியது. 

கடந்த பல ஆண்டுகளாக இல்லாத வகையில் இந்தியா பாகிஸ்தான் இடையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதை கணக்கில் கொள்ளாமல் மெகா வீடியோ கான்ஃபெரன்சி நிகழ்ச்சி நடத்தப்படுவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. 

இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் NDTV-யிடம் பேசியபோது, ‘தற்சமயம், நாம் ஒரு நெருக்கடியில் இருக்கிறோம். பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள பைலட் மீண்டும் நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று கவலையில் உள்ளோம். அவர் எப்படி இருக்கிறார் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால் மோடி, சில பூத் கமிட்டி தொண்டர்களிடம் பேசுவதில் கவனம் செலுத்தி வருகிறார்' என்று கடுமையாக சாடியுள்ளார். 

இன்று காங்கிரஸ் கட்சி நடத்தவிருந்த செயற்குழுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று டெல்லியில் சந்தித்த நாட்டின் 21 எதிர்கட்சிகள், ‘அரசியல் ஆதாயத்துக்காக இந்த விவகாரத்தைப் பயன்படுத்துகிறது ஆளுங்கட்சி' என்று பகிரங்கமாக குற்றம் சாட்டின. 

ஆம் ஆத்மி தரப்போ, ‘மொத்த எதிர்கட்சிகளும் தேசிய பாதுகாப்பு குறித்து கவலையில் இருக்கின்றன. அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லிக்கு மாநில அந்தஸ்து கோரி நடத்தவிருந்த உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளார். காங்கிரஸ், அவர்களின் கட்சி சந்திப்புகளை தள்ளிப் போட்டுள்ளது. ஆனால், பாஜக-வும் பிரதமர் மோடியும் தேர்தல் பணிகளில் பிஸியாக உள்ளனர்' என்று விமர்சனம் செய்துள்ளது. 

அதே நேரத்தில் பாஜக தரப்பு, ‘பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகளை தற்சமயம் மாற்றுவது என்பது தீவிரவாதிகளுக்குச் சாதகமாக அமைந்துவிடும்' என்று கருத்து தெரிவித்துள்ளது. 

இன்றைய நிகழ்ச்சி குறித்து பிரதமர் மோடியின் அதிகாரபூர்வ தளத்தில், ‘வரும் 28 ஆம் தேதி பிரதமர் மோடியுடன் பேச தயாராக இருங்கள். நாட்டில் பல பகுதிகளில் இருக்கும் பாஜக தொண்டர்கள், நலன் விரும்பிகளுடன் பிரதமர் மோடி பேசவிருக்கிறார்' என்று பதிவிடப்பட்டுள்ளது. 

 

மேலும் படிக்க - விமானப்படை அதிரடி தாக்குதலால் பாஜக-வுக்கு சாதகம்: எடியூரப்பா சர்ச்சை பேச்சு

.