இந்த சிலையை பத்ம பூஷன் விருது வென்ற சிற்பி ராம் வி சுதர் வடிவமைத்துள்ளார்
ஹைலைட்ஸ்
- குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது
- 5 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தத் திட்டம் குறித்து அறிவித்தார் மோடி
- சிலைக்காக பல நாடுகளிலிருந்து இரும்புப் பெறப்பட்டது
New Delhi: இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சர்தார் படேலின் 143வது பிறந்த நாளன்று அவரை கௌரவிக்கும் வகையில், குஜராத்தில் அவரின் 182 மீட்டர் உயரம் கொண்ட சிலையை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. உலகின் மிக உயரமான சிலை என்று சொல்லப்படும் இது, அமெரிக்காவில் இருக்கும் சுதந்திர தேவியின் சிலையை விட இரண்டு மடங்கு உயரமானது. இந்த சிலையை உருவாக்க 2,989 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
முக்கியமான 10 விஷயங்கள்:
1.பிரதமர் நரேந்திர மோடி, இந்த சிலை நிறுவும் திட்டத்தை, 2013, அக்டோபர் 31 ஆம் தேதி ஆரம்பித்தார். அப்போது, அவர் குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்து வந்தார்.
2.இரும்பால் செய்யப்பட்ட இந்த சிலைக்காக, பல நாடுகளிலிருந்து இரும்பு பெறப்பட்டது. இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான படேல், ‘இரும்பு மனிதர்' என்று அழைக்கப்பட்டவர் ஆவார்.
3.இந்த சிலையை பத்ம பூஷன் விருது வென்ற சிற்பி ராம் வி சுதர் வடிவமைத்துள்ளார். லார்சன் அண்டு டூப்ரோ மற்றும் சர்தார் சரோவர் நர்மதா நிகாம் நிறுவனமும் இந்த சிலையை அமைக்க உதவி செய்துள்ளன. இந்த சிலையை உருவாக்க 250 பொறியாளர்கள், 3400 ஊழியர்கள் 33 மாதங்கள் உழைத்தனர்.
4.சீனாவில் இருக்கும் புத்தர் சிலைதான், உலகின் உயரமான சிலை என்று இதுவரை பெயர் பெற்றிருந்தது. தற்போது நிறுவப்பட்டுள்ள படேலின் சிலை, புத்தர் சிலையை விட 177 அடி உயரமானதாக இருக்கும்.
5.சிலையை உருவாக்க பயன்படுத்தப்பட்ட வெண்கலம், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இந்த விஷயத்தை காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘சர்தார் சிலையில் ‘மேட் இன் சைனா'' என்று எழுதி வையுங்கள்' என்று பாஜக அரசை விமர்சித்துள்ளார்.
6.இந்தியாவில் சிலைக்குத் தேவையான வகையில் வெண்கலத்தை வடிவமைக்கும் வசதி இல்லை என்று அரசு தரப்பு விளக்கம் அளித்துள்ளது. மேலும், வெண்கலத்தைத் தயாரிக்க ஏலம் விடப்பட்டதாகவும், அதை சீன நிறுவனம் வென்றதாகவும் அரசு தரப்பு கூறியுள்ளது.
7.சிலையின் 193 வது மீட்டரில், மக்கள் பார்க்குபடி வசதி செய்து தரப்பட்டுள்ளது. அந்த உயரத்திலிருந்து சர்தார் சரோவர் அணை, அதன் நீர்பிடிப்புப் பகுதி, விந்திய மலைத் தொடர் உள்ளிட்டவற்றை பார்க்க முடியும்.
8.சிலையின் அடிவாரத்தில், சர்தார் படேலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஒரு அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலே செல்ல இரண்டு உயர் வேக லிஃப்ட்டும் பொருத்தப்பட்டுள்ளது.
9.சிலை திறக்கப்பட்டதை அடுத்து, ஒரு நாளைக்கு 15,000 பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
10.படேல் அருங்காட்சியகத்தில், 40,000 ஆவணங்கள், 2000 புகைப்படங்கள், ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.