This Article is From Dec 10, 2018

பாஜக கூட்டணியிலிருந்து விலகிய அமைச்சர்… எதிர்கட்சிகளுடன் கூட்டு!

இன்று டெல்லியில் நடக்கும் எதிர்கட்சிகள் சந்திப்பில் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

பாஜக கூட்டணியிலிருந்து விலகிய அமைச்சர்… எதிர்கட்சிகளுடன் கூட்டு!

பாஜக கூட்டணியில் இருந்த, மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா, இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்

ஹைலைட்ஸ்

  • பாஜக கூட்டங்களில் இனி பங்கேற்கமாட்டேன், குஷ்வாஹா
  • கூட்டணி வெளியேற்றத்தைப் பற்றி இன்று குஷ்வாஹா அறிவிப்பார்
  • எதிர்கட்சிகளுடன் குஷ்வாஹா சேர வாய்ப்புள்ளது
New Delhi:

பாஜக கூட்டணியில் இருந்த, மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா (Upendra Kushwaha), இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவர் எதிரகட்சிகள் டெல்லியில் நடத்தும் பேச்சுவார்த்தையிலும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குஷ்வாஹா, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாக குஷ்வாஹாவுக்கும், பாஜக-வுக்கும் இடையில் பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

இது குறித்து பிரதமருக்கு குஷ்வாஹா எழுதிய ராஜினாமா கடிதத்தில், ‘கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்னர் உங்கள் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நான் பல எதிர்பார்ப்புகளுடன் இணைந்தேன். 2014 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின் போது, நீங்கள் நாட்டு மக்களுக்கும் பிகார் மக்களுக்கும் பல சத்தியங்களைச் செய்தீர்கள். அதன் காரணமாகவே, நான் பாஜக-வுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வந்தேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

ராஷ்டிரிய லோக் சமதா கட்சியின் தலைவரான குஷ்வாஹாவுக்கு, பிகாரில் நல்ல செல்வாக்கு உள்ளது. தற்போது, அவர் தேஜகூ-விலிருந்து விலக உள்ளதால், பிகார் அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

190tjie

சில மாதங்களுக்கு முன்னர் பிகாருக்கு வந்த பாஜக தலைவர் அமித்ஷா, அம்மாநில முதல்வர் நிதிஷ் குமாருடன் தொகுதி பங்கீடு குறித்துப் பேசினார். அப்போது அமித்ஷா தெரிவித்த தொகுதி பங்கீடு எண்ணிக்கை, குஷ்வாஹாவுக்கு உகந்ததாக இல்லை.

இதனால் அவர் கடந்த சில மாதங்களாக பாஜக-வுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார். கடந்த வாரம் நடந்த ஒரு சந்திப்பில் பேசிய குஷ்வாஹா, ‘மசூதி கட்டுவதற்கோ, கோயில் கட்டுவதற்கோ நாங்கள் என்றும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை. ஆனால், அதன் பொருட்டு மக்களின் அடிப்படை பிரச்னைகளை புறந்தள்ளிவிடக் கூடாது. இது மக்களுக்கு மத்தயில் பிளவு ஏற்படுத்தும். மேலும் சமூக அமைதியையும் குலைக்கும். இதைப் போன்ற நடவடிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்' என்று கூறினார்.

இதன் தொடர்ச்சியாக இன்று குஷ்வாஹா (Upendra Kushwaha) பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் அவர், இன்று டெல்லியில் நடக்கும் எதிர்கட்சிகள் சந்திப்பில் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

.