ஜெய்ப்பூர் போலீஸ் கமிஷனர் ஆனந்த் ஸ்ரீவஸ்தவா இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்
Jaipur: பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலத் மோடி, நேற்று ஜெய்ப்பூர் சென்றுள்ளார். அப்போது தனக்கு காவலுக்குப் போடப்பட்டிருக்கும் போலீஸாருக்குத் தனியாக ஒரு வாகனம் தரப்பட வேண்டும் என்று கூறி தர்ணாவில் ஈடுபட்டதாக உள்ளூர் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.
ஜெய்ப்பூர் - அஜ்மர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பக்ரு காவல் நிலையத்தில்தான் பிரகலத் மோடி, தர்ணாவில் ஈடுபட்டார் என்று சொல்லப்படுகிறது.
பிரகலத் மோடியின் பாதுகாப்புக்கு என்று பணி அமர்த்தப்பட்டிருந்த 2 காவலர்கள், பர்கு காவல் நிலையத்தில் காத்திருந்தனர் என்றும், விதிப்படி அவர்கள் பிரகலத் மோடியின் வாகனத்தில் ஏற வேண்டும் என்றும் கூறுகிறார் ஜெய்ப்பூர் போலீஸ் கமிஷனர் ஆனந்த் ஸ்ரீவஸ்தவா.
அவர் மேலும், “நாங்கள் இது குறித்து ஆணையை அவருக்குக் காண்பித்தோம். பாதுகாப்புக்கான காவலர்கள் பிரகலத் மோடியின் வாகனத்தில் செல்லத் தயாராக இருந்தனர். ஆனால், அவர் அதை ஏற்கவில்லை. தனி வாகனம் வேண்டும் என்று கேட்டார்” என்று விளக்கினார்.
ஆனால், வாக்குவாதங்களுக்குப் பின்னர் பிரகலத் மோடி, 2 போலீஸாரையும் தன் வாகனத்திலேயே ஏற்றிக் கொள்ள சம்மதித்தார் என்று கூறினார் ஸ்ரீவஸ்தவா. பிரகலத் மோடி மேற்கொண்ட தர்ணா, ஒன்றரை மணி நேரம் வரை நீடித்ததாக காவல் துறை வட்டாரம் கூறுகிறது.