ரஃபேல் விவகாரம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்திய ராகுல் காந்தி
ஹைலைட்ஸ்
- ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமரை ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார்.
- அனில் அம்பானி நிறுவனத்தை இந்தியாதான் தேர்வு செய்ததாக ஹாலந்தே கூறினார்.
- “மோடி ஊழல் செய்திருக்கிறார். அவர் விளக்கம் அளிக்க வேண்டும்” - ராகுல் காந்
New Delhi: ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலந்தே கூறிய கருத்துகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இன்று அவர் அளித்த பேட்டியில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலந்தே இந்திய பிரதமரை திருடன் என்று கூறியுள்ளார். இதுபற்றி மோடி ஒருவார்த்தைகூட பதில் சொல்லவில்லை. அமைதியாக உள்ளார். ரஃபேல் விவகாரத்தில் நடந்தது என்ன என்பதுபற்றி பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். அவருக்கு 2 வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, ஹாலந்தே கூறியதை ஏற்று தான் திருடன் என மோடி ஒப்புக் கொள்ள வேண்டும். அல்லது ஹாலந்தே கூறியது பொய் என விளக்கம் அளிக்க வேண்டும். உண்மையிலேயே பிரதமர் மோடி ஊழல் செய்திருக்கிறார் என்று கூறினார்.
இதற்கு பதில் அளித்துள்ள மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், பொறுப்பற்ற, வெட்கக்கேடான முறையில் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் லஞ்சம் பெறுவதற்குதான் அவர் இவ்வாறு கூறியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான் ரிலையன்ஸும், டசால்டும் கடந்த 2012-ல் ஒப்பந்தத்திற்குள் வந்தன என்றார்.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் இந்திய பங்குதாரராக ரிலையன்ஸ் டிஃபன்ஸைத்தான் மத்திய அரசு பரிந்துரை செய்து என நேற்று தகவல் வெளியானது. இதனை பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலந்தே கூறியதாக பிரான்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், ஹாலந்தே கூறியதாக வந்த செய்தியில் உள்ள கருத்துகளில் மாற்றம் ஏதும் இல்லை என அதிபர் அலுவலகம் என்.டி.டி.வி.யிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதனால் இந்த விவகாரம் இன்னும் பெரிதாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக வெளிவரும் தகவல்கள் அனைத்தும் ஆதாரமில்லாதவை என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இந்த சூழலில்தான் ராகுல் காந்தி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, மோடியை விமர்சித்துள்ளார். அதற்கு பாஜகவும் பதில் அளித்துள்ளது.