This Article is From Apr 17, 2020

கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் பணியை தொடங்குகிறார் ஸ்வீடன் இளவரசி!!

தனது பணியின் முதல் நாளின் புகைப்படத்தினை சோபியா இணையத்தில் பகிர்ந்திருக்கிறார். நீல நிற உடைகளுடன் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து நிற்கும் அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் பணியை தொடங்குகிறார் ஸ்வீடன் இளவரசி!!

சுவீடனின் இளவரசி சோபியா ஸ்வீடனில் உள்ள ஒரு மருத்துவமனையில் தன்னார்வத் தொண்டு செய்கிறார்.

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தினை கடந்திருக்கிறது. தொற்றால் 1லட்சத்து 40 ஆயிரம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். ஸ்வீடன் நாட்டில் 12,500க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 1,300க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில் அந்நாட்டு இளவரசி சோபியா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படும் மருத்துவமனையில் பணியாற்றத் தொடங்கியுள்ளார். 35 வயதான இவர் ஆண்லைனில் இதற்காக மூன்று நாள் பயிற்சியினை முடித்தபின்பு அந்நாட்டுத் தலைநகரில் உள்ள சோபியாஹெமெட் மருத்துவமனையில் தன்னார்வத் தொண்டு செய்ய தொடங்கியுள்ளார்.

மருத்துவமனையில் சுகாதார உதவியாளராக சேர்ந்துள்ள இளவரசி சோபியா, கோவிட் -19 நோயாளிகளை கையாள்வதில் நேரடியாக ஈடுபட மாட்டார் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. மருத்துவர் அல்லது சுகாதார பணியாளர்களுக்கு உதவும் பணியில் ஈடுபடுத்தப்படுவார் என்று நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

சோபியாஹெமெட் மருத்துவமனையின் ஆன்லைன் பாடத்திட்டமானது, மருத்துவமற்ற, ஆனால் சுகாதாரம் குறித்த சில முக்கிய பயிற்சிகளை வழங்குகிறது. இது சுத்தம் செய்தல், சமையலறையில் வேலை செய்தல், உபகரணங்கள் கிருமி நீக்கம் செய்தல் என பலவற்றைக் கொண்டிருக்கிறது. இந்த பயிற்சியினை முடித்தவர்கள் மருத்துவமனை நிர்வாகத்திற்கு உதவ முடியும். தற்போது வாரத்திற்கு 80 பேர் வீதத்தில் மருத்துவமனை இந்த பயிற்சியினை தன்னார்வலர்களுக்கு வழங்கி வருகிறது. கொரோனா தொற்று காரணமாக மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் பணி அதிகரித்து வருகிறது என நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

“இந்த நெருக்கடியில், இளவரசி சுகாதார பணிக்காக தன்னை ஈடுபடுத்திக்கொள்ள விரும்புகிறார். இதன் மூலமாக மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் பணி சுமையை குறைக்க முடியும். இதில் தன்னார்வலர்கள் பலரும் தங்களை இணைத்துக்கொள்ள விரும்புகின்றனர்.” என அந்நாட்டு நீதிமன்றத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

தனது பணியின் முதல் நாளின் புகைப்படத்தினை சோபியா இணையத்தில் பகிர்ந்திருக்கிறார். நீல நிற உடைகளுடன் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து நிற்கும் அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இவ்வாறான தன்னார்வலர்கள் மூலம் சுகாதார பணியாளர்களின் பணி சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக 2019-ல் இங்கிலாந்தின் அழகி பட்டம் வென்ற இந்திய வம்சாவளியான பாஷா முகர்ஜி மீண்டும் தனது மருத்துவப்பணியினை இங்கிலாந்தில் தொடங்கியுள்ளார். இவர் இளங்கலை மருத்துவ பட்டம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Click for more trending news


.