கல்லூரி முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்
Ajmer: கல்லூரர வளாகத்தில் பிறருக்கு இடையூறாக பிறந்த நாளைக் கொண்டாடிய மாணவர் தலைவனின் செயலை தட்டிக் கேட்ட முதல்வர் தாக்கப்பட்டார்.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள தயானந்த் கல்லூரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் அடங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
கல்லூரி மாணவர் தலைவர் ராம் சவுத்ரி தனது நண்பர்கள் 40 பேருடன் சேர்ந்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடுகிறார். பிறகு அங்கு கல்லூரி முதல்வர் டாக்டர் லக்ஷ்மிகாந்த் வருகிறார். பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால் ஆத்திரம் அடையும் மாணவர் ராம் சவுத்ரி கல்லூரி முதல்வரின் கன்னத்தில் அறைகிறார். அதிர்ந்து போன முதல்வர் ஒருசில விநாடி திகைத்து விட்டு அவரும் மாணவரைத் தாக்குகிறார்.
இது தொடர்பாக மாணவர் தரப்பிலும் கல்லூரி தரப்பிலும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கல்லூரி முதல்வர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு கூறும் போது “நான் கல்லூரியில் வழக்கமான கண்காணிப்பு பணியில் இருந்தேன். அப்போது ஓரிடத்தில் மாணவர்கள் கும்பலாக கூச்சலிடுவதை பார்த்து அங்கு சென்றேன். பிறந்த நாள் கொண்ட்டாட்டம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அவரிடம் இத்தகைய கொண்டாட்டங்களை கல்லூரி வளாகத்தில் அனுமதிக்க முடியாது என்றேன். ஆனால், அவர் என்னை கன்னத்தில் அறைந்தார். தற்காப்புக்காக நானும் தாக்கினேன்” என்று தெரிவித்தார்.