This Article is From Mar 17, 2020

தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: ராமதாஸ் வரவேற்பு

அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதன் மூலம் தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழர்கள் நலனுக்காகவும் பாமக முன்வைத்த இன்னொரு கோரிக்கையை அரசு நிறைவேற்றியுள்ளது.

தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: ராமதாஸ் வரவேற்பு

தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: ராமதாஸ் வரவேற்பு

ஹைலைட்ஸ்

  • தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க சட்டதிருத்தம்
  • தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
  • இது பாமகவுக்குக் கிடைத்த மேலும் ஒரு வெற்றியாகும்.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

"தமிழ்நாட்டில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வகை செய்யும் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான முன்வரைவு தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஆங்கில வழிக் கல்வி மீதான மோகத்தைப் போக்கி, தமிழ் வழிக் கல்வியைக் கூடுதலாக ஊக்குவிக்கும் நோக்குடன் கொண்டு வரப்பட்டுள்ள இந்தத் திருத்தம் வரவேற்கத்தக்கது என ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது,  தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு தேர்வாணையங்களின் மூலம் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 

ஆனால், ஒரு பணிக்குத் தேவைப்படும் அடிப்படைக் கல்வித் தகுதியைத் தமிழ் வழியில் படித்திருந்தாலே, 20% இட ஒதுக்கீட்டைப் பெறலாம் என்று அப்போதைய சட்டத்தில் கூறப்பட்டிருந்ததால், அந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது. இதைத் தடுக்கும் வகையில், பள்ளிக் கல்வி முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும் இந்த 20% இட ஒதுக்கீடு கிடைக்கும் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று பாமக பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது.

அதை நிறைவேற்றும் வகையில் அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதன் மூலம் தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழர்கள் நலனுக்காகவும் பாமக முன்வைத்த இன்னொரு கோரிக்கையை அரசு நிறைவேற்றியுள்ளது. இது பாமகவுக்குக் கிடைத்த மேலும் ஒரு வெற்றியாகும்.

தமிழக சட்டப்பேரவையில் செய்யப்பட்டுள்ள திருத்தத்தின் மூலம் தமிழகத்தில் இனி ஆறாம் வகுப்பு முதல் தமிழ் வழியில் பயின்று, 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளைத் தமிழில் எழுதியவர்கள் மட்டும்தான், தமிழ் வழிக் கல்விக்கான 20% இட ஒதுக்கீட்டைப் பெற முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

.