This Article is From Jul 03, 2020

ரயில் சேவைகளை தனியார் மயமாக்குவது, ஏழைகளுக்கு எதிரான நடவடிக்கை: ராமதாஸ் கண்டனம்!

இந்தியாவைப் பொறுத்தவரை ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு ரயில் சேவைகள் என்பது மிகப்பெரிய வரம் ஆகும்

ரயில் சேவைகளை தனியார் மயமாக்குவது, ஏழைகளுக்கு எதிரான நடவடிக்கை: ராமதாஸ் கண்டனம்!

ரயில் சேவைகளை தனியார் மயமாக்குவது, ஏழைகளுக்கு எதிரான நடவடிக்கை: ராமதாஸ் கண்டனம்!

ரயில் சேவைகளை தனியார் மயமாக்குவது ஏழைகள் மற்றும் நடுத்தர வகுப்பினரிடமிருந்து ரயில் சேவையைப் பறிக்கும் செயலாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் தனியார் ரயில் சேவைகள் தொடங்கப்படும் என்று ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் அறிவித்திருக்கிறார். டெல்லியிலிருந்து காணொலி மூலமாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ், நாடு முழுவதும் 109 வழித்தடங்களில் 151 ரயில்கள் தனியார் மயமாக்கப்பட இருப்பதாகத் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின்படி, தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஜோத்பூர் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் 14 ரயில்கள், புதுவையிலிருந்து சென்னை வழியாக செகந்திராபாத், கன்னியாகுமரியிலிருந்து எர்ணாகுளம், கோவையிலிருந்து திருநெல்வேலி செல்லும் ரயில்கள் உட்பட தமிழ்நாட்டுக்குள் இயங்கும் ரயில்கள், தமிழ்நாட்டைக் கடந்து செல்லும் ரயில்கள் என மொத்தம் 24 ரயில்கள் தனியார் மயமாக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக ராமதாஸ் மேலும், கூறியதாவது, ரயில்கள் தனியார் மயமாக்கப்பட்டால் பயணிகளுக்கு ஏராளமான வசதிகள் கிடைக்கும்; செல்ல வேண்டிய இடத்தை மிகவும் குறைந்த நேரத்தில் சென்றடைந்து விடலாம் என்று மக்களை மயக்கும் வகையில் செய்திகள் பரப்பப்படுகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு ரயில் சேவைகள் என்பது மிகப்பெரிய வரம் ஆகும். பேருந்துகளுடன் ஒப்பிடும்போது மிகக்குறைந்த கட்டணத்தில், பாதுகாப்பான முறையில் பயணம் செய்வதற்கு ரயில் சேவைகள் மட்டும்தான் ஒரே வாய்ப்பாகும்.

ஒருபுறம் கிளை வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில் சேவைகளை நிறுத்துவதற்கும், முக்கிய வழித்தடங்களில் குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் சாதாரண பயணியர் வண்டிகளை அதிக கட்டணம் வசூலிக்கப்படும் விரைவு ரயில்களாக மாற்றுவதற்கும் ஆணையிட்டுள்ள ரயில்வே வாரியம், இப்போது ரயில்களை தனியார் மயமாக்கினால், அதில் பயணம் செய்வது குறித்து ஏழைகள், நடுத்தர மக்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. இது ஏழைகளுக்கு எதிரான நடவடிக்கை ஆகும்.

அதுமட்டுமின்றி, 151 ரயில்கள் தனியார் மயமாக்கப்படுவதால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை உருவாகும். இவை எதுவுமே ரயில்வே துறையின் வளர்ச்சிக்கோ, மக்களின் முன்னேற்றத்திற்கோ வழிவகுக்காது. தனியார் நிறுவனங்களின் லாபம் அதிகரிப்பதற்கு மட்டும் தான் வழிவகுக்கும்.

ரயில்வே துறையை லாபத்தில் இயக்க தனியார் மயமாக்கல் மட்டுமே ஒரே வழியல்ல. அவற்றைக் கடந்து ஏராளமான வழிகள் உள்ளன. பாமகவைச் சேர்ந்தவர்கள் ரயில்வே துறை இணையமைச்சர்களாக இருந்தபோது ரயில்வே துறை லாபத்தில் இயங்கியது. அதற்கு முந்தைய 16 ஆண்டுகளில் ரயில்வே துறைக்கு மொத்தம் ரூ.61 ஆயிரம் கோடி கடன் சுமை இருந்தது.

எனவே, ரயில்வே துறையை முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டிலேயே நீடிக்கச் செய்து, அதை லாபத்தில் இயக்குவதற்கான ஆக்கபூர்வமான வழிமுறைகளை ஆராய வேண்டும். ரயில் சேவைகளை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசும், ரயில்வே வாரியமும் கைவிட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

.