This Article is From Jul 19, 2019

உ.பி-யில் 10 பேர் சுட்டுக்கொலை: பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க பிரியங்காவுக்கு ‘தடை’!

நிலப் பிரச்னையால் சோன்பத்ரா கிராமத்தில் குஜ்ஜார் மற்றும் கோண்ட் சமூக மக்களிடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 24 பேர் காயமடைந்தனர்

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 74 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

Lucknow:

உத்தர பிரதேச மாநிலத்தின் சோன்பத்ரா என்னும் கிராமத்தில் ஏற்பட்ட நிலப் பிரச்னை காரணமாக, 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்படி உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்திக்க, கிழக்கு உத்தர பிரதேசத்தின் காங்கிரஸ் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி வத்ரா, நேரில் சென்றார். அவரை பாதியிலேயே உத்தர பிரதேச போலீஸ் தடுத்து நிறுத்தியது. 

இந்த சம்பவம் தொடர்பாக முன்னர் பேசிய பிரியங்கா காந்தி, மாநிலத்தில் ஆளும் பாஜக-வையும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் விமர்சித்தார். உத்தர பிரதேசத்தில் சட்ட ஒழுங்கு தொடர்ந்து சீர் கெட்டு வருவதை இந்த சம்பவம் பிரதிபலிப்பதாகவும் பிரியங்கா கூறினார். 

சோன்பத்ராவுக்குப் போகும் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டதால், சாலையில் இறங்கி அமர்ந்துவிட்டார் பிரியங்கா காந்தி. அவரை காங்கிரஸ் தொண்டர்களும் பாதுகாப்புப் படையினரும் சூழ்ந்து கொண்டனர்.

“நிலப் பிரச்னையில் ஈவு இரக்கம் இல்லாமல் சுட்டுக் கொல்லப்பட்ட நபர்களின் குடும்பங்களை பார்க்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். என் மகனை ஒத்த வயதுடைய ஒரு சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். எந்த சட்ட அடிப்படையில் நான் இங்கு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளேன்” என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

சோன்பத்ரா சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் இருக்கும் மருத்துவமனையில்தான் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு விமானம் மூலம் வந்து, சிகிச்சைப் பெறுபவர்களைப் பார்வையிட்டார் பிரியங்கா.

நிலப் பிரச்னையால் சோன்பத்ரா கிராமத்தில் குஜ்ஜார் மற்றும் கோண்ட் சமூக மக்களிடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 24 பேர் காயமடைந்தனர். 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 74 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 

.