This Article is From Feb 24, 2019

தேர்தலில் போட்டியிடுகிறாரா பிரியங்காவின் கணவர் வதேரா? – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்

தேர்தலில் போட்டியிடுகிறாரா பிரியங்காவின் கணவர் வதேரா? – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

அரசியல் என்ட்ரி குறித்து வதேரா பரபரப்பான அறிக்கையை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்

ஹைலைட்ஸ்

  • மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாக கூறியுள்ளார் வதேரா
  • கடந்த மாதம் நேரடி அரசியலுக்கு வந்தார் பிரியங்கா காந்தி
  • சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக வதேராவிடம் விசாரணை நடந்து வருகிறது
New Delhi:

பேஸ்புக்கில் ராபர்ட் வதேரா வெளியிட்டுள்ள பதிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தை சேர்ந்த ராபர்ட் வதேரா பிரியங் காந்தியை கடந்த 1999-ல் திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ரைஹான் என்ற மகனும் மிராயா என்ற மகளும் உள்ளனர்.

வதேரா மீது போலி ஆவணங்களை கொடுத்து அரியானாவில் சொத்துக்களை வாங்கினார், சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்து லண்டனில் சொத்துக்களை குவித்தார் என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன. இதுதொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த சில வாரங்களை விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்தல் நெருங்கும் நேரங்களில் வதேரா மீது விசாரணை வருவது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த பிரியங்கா காந்தி, விசாரணை தொடரத்தான் செய்யும். அதை தடுக்க முடியாது என்று ஆதங்கத்துடன் கூறியிருந்தார்.

இந்த நிலையில், அரசியல் என்ட்ரி குறித்து வதேரா பரபரப்பான அறிக்கையை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ராபர்ட் வதேரா கூறியிருப்பதாவது-

நான் அரசியலுக்கு வந்தால்தான் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது செய்ய முடியும் என்கிற நிர்பந்தம் ஏதும் இல்லை. ஆனால் அரசியலுக்கு வந்தால் என்னால் அதிகளவு நல்லது செய்ய முடியும். பிறகு நான் ஏன் அதைச் செய்ய தயங்க வேண்டும். என்ன இருந்தாலும் மக்கள்தான் அதனை முடிவு செய்வார்கள்.

நாட்டின் வெவ்வேறு இடங்களில் ஆண்டுக்கணக்கில் காங்கிரசுக்கு பிரசாரம் செய்திருக்கிறேன். ஆனால் உத்தர பிரதேசம்தான் எனக்கு அதிக அன்பையும், உணர்வையும், மரியாதையையும் கொடுத்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் கவனத்தை திருப்ப வேண்டும் என்பதற்காக மத்திய அரசு எனது பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளது. ஆனால் எது உண்மை என்பது மக்களுக்கு தெரியும்.

இவ்வாறு ராபர்ட் வதேரா கூறியுள்ளார். இந்தப் பதிவு அவர் நேரடி அரசியலுக்கு வர விரும்புவதைக் காட்டுகிறது. எனவே இந்த மக்களவை தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

 

.