This Article is From Jul 30, 2019

“பிரதமரே…”- உன்னாவ் விவகாரத்தில் மோடியை எச்சரித்த பிரியங்கா!

"திட்டமிடப்பட்ட விபத்து கூட நடத்தப்பட்டிருக்கலாம் என்று எப்.ஐ.ஆர் கூறுகிறது"

“பிரதமரே…”- உன்னாவ் விவகாரத்தில் மோடியை எச்சரித்த பிரியங்கா!

"மிஸ்டர் பிரைம் மினிஸ்டர், அரசியல் அதிகாரத்தில் இருக்கும் அந்த கிரிமினல்களின் பதவிகளைப் பறியுங்கள்."

New Delhi:

உன்னாவ் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது இரண்டு நாட்களுக்கு முன்னர் சந்தேகத்துக்கு இடமுள்ள லாரி மோதி விபத்து ஏற்படுத்தியது. இதனால் அந்தப் பெண் உயிருக்காக போராடி வருகிறார். உன்னாவ் விவகாரத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர் குல்தீப் செங்கார் என்கிற பாஜக எம்.எல்.ஏ. அவரைக் காப்பற்றத்தான் பாஜக தரப்பு இப்படியொரு காரியத்தில் ஈடுபட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸின் பிரியங்கா காந்தி வத்ரா, பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் பேசியுள்ளார். 

“குல்தீப் செங்கார் போன்ற ஒருவருக்கு எதற்கு அரசியல் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். எதற்கு உன்னாவ் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர் தனியாக போராடும்படி நிர்பந்திக்க வேண்டும்? இந்த விவகாரம் தொடர்பான எப்.ஐ.ஆர், உன்னாவ் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அச்சுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளதை தெளிவாக எடுத்துரைக்கிறது. திட்டமிடப்பட்ட விபத்து கூட நடத்தப்பட்டிருக்கலாம் என்று எப்.ஐ.ஆர் கூறுகிறது.

மிஸ்டர் பிரைம் மினிஸ்டர், அரசியல் அதிகாரத்தில் இருக்கும் அந்த கிரிமினல்களின் பதவிகளைப் பறியுங்கள். இன்னும் நேரம் கடந்துவிடவில்லை” என்று கறாராக ட்வீட்டியுள்ளார். 

கடந்த 2017 ஆம் ஆண்டு, பதின் பருவ சிறுமி, வேலை கேட்டு உத்தர பிரதேச உன்னாவில் இருக்கும் எம்.எல்.ஏ செங்கார் வீட்டுக்கு சென்றபோது பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாக குற்றம் சாட்டினார். 

பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை போலீஸ் பிடியில் இருக்கும்போது இறந்தது, பிரச்னையை மேலும் பெரிதாக்கியது. சிறுமியின் தந்தை கைது செய்யப்படுவதற்கு முன்னர் குல்தீப் செங்காரின் சகோதரர் அடூல் செங்காரால் தாக்கப்பட்டுள்ளார். அதனால்தான் சிறுமியின் தந்தை இறந்துள்ளார். இதைத் தொடர்ந்து அடூல் செங்கார் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட சூழலில்தான் இரு நாட்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்ட சிறுமி, உத்தர பிரதேசத்தின் ரேபரேலி மாவடத்தில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரின் மீது வண்டி எண் இல்லாத லாரி ஒன்று மோதியது. இந்த சம்பவத்தில் அந்தப் பெண்ணுடன் இருந்த இரு உறவினர்கள் இறந்துவிட்டனர். பெண்ணின் வழக்கறிஞருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணும் உயிருக்காக மருத்துவமனையில் போராடி வருகிறார். 

.