மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்கு பாஜக சதி செய்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஹைலைட்ஸ்
- மத்தியபிரதேசத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாகின்றன
- மாநிலங்களவை எம்.பி.யாக. காங்கிரஸ் தலைவர்களுக்குள் போட்டி என தகவல்
- பிரியங்கா தற்போது காங்கிரஸ் பொதுச் செயலாளராக உள்ளார்
Bhopal: காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தியை மாநிலங்களவை உறுப்பினராக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் வலியுறுத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக மத்திய பிரதேசத்திலிருந்து அவர் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.
மத்திய பிரதேசத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் மார்ச் 26-ம்தேதி நடத்தப்படவுள்ளது. இதுதொடர்பாகவும் மாநிலத்தில் நிலவும் அரசியல் நிலவரம் தொடர்பாகவும் முதல்வர் கமல்நாத் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார்.
இதுதொடர்பாக மத்திய பிரதேசத்தின் பொதுப்பணித்துறை அமைச்சர் சஜ்ஜன் சிங் வர்மா பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், 'பிரியங்கா காந்தி மத்திய பிரதேசத்திலிருந்துதான் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட வேண்டும். இது நடந்து முடிந்து விட்டால் மாநிலத்தில் பல பிரச்னைகள் தீர்க்கப்பட்டு விடும்' என்று தெரிவித்தார்.
முன்னாள் மத்திய அமைச்சர் அருண் யாதவும், பிரியங்கா காந்தி மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தற்போது மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங், பாஜக தலைவர்கள் பிரபாத் ஜா, சத்யநாராயணனன் ஜாதியா ஆகியோரின் பதவிக் காலம் ஏப்ரல் 9-ம்தேதியுடன் முடிகிறது.
தனது டெல்லி பயணத்தின்போது கமல்நாத் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோரை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 17 பேர் பெங்களூருவுக்கு பறந்த பின்னர் அக்கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் 10 எம்எல்ஏக்கள் காணாமல் போனார்கள். அவர்களில் 8 பேர் காங்கிரஸை சேர்ந்தவர்கள். அந்த 8 பேருக்கும் திரும்பி வந்து விட்டனர்.
அவர்கள் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளனர். மற்ற 2 பேர் மாயமாகவே உள்ளனர்.
மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்கு பாஜக சதி செய்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் மோதல்தான் இந்த விவகாரத்திற்கு காரணம் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.