காங்கிரஸின் பொதுச் செயலாளராக சில நாட்களுக்கு முன்னர் நியமனம் செய்யப்பட்டார் பிரியங்கா காந்தி வத்ரா.
ஹைலைட்ஸ்
- கும்பமேளாவில் பிரியங்கா புனித நீராடுவார் எனத் தகவல்
- பிப்ரவரி 4 அன்று புனித நீராட வாய்ப்பு
- ராகுலுடன் சேர்ந்து அன்று செய்தியாளர்களை பிரியங்கா சந்திக்கவும் வாய்ப்பு
New Delhi: காங்கிரஸின் பொதுச் செயலாளராக சில நாட்களுக்கு முன்னர் நியமனம் செய்யப்பட்டார் பிரியங்கா காந்தி வத்ரா. இந்நிலையில் அவர் எப்படி, எந்த தேதியில் அதிகாரபூர்வ அரசியல் என்ட்ரி கொடுக்கிறார் என்பது பற்றி பரபரப்பான தகவல்கள் வந்துள்ளன.
உத்தர பிரதேசத்தில் மிக விமர்சையாக நடந்து வரும் கும்பமேளா நிகழ்ச்சியில் வரும் பிப்ரவரி 4 அன்று, புனித நீராடிய பின்னர், காங்கிரஸின் பொதுச் செயலாளராக தனது பணியை பிரியங்கா ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினமே பிரயங்கா தனது சகோதரரும், கட்சியின் தலைவருமான ராகுல் காந்தியுடன் சேர்ந்து, கூட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
பிப்ரவரி 4 அன்று, மவுனி அமாவாசை நாள். அன்று கும்பமேளா திருவேணி சங்கமத்தில் பிரியங்கா புனித நீராடிய பின்னர், அரசியல் பொறுப்பை ஆரம்பித்தால் சரியாக இருக்கும் என்று காங்கிரஸ் தரப்பு கருதுகிறது. 2001 ஆம் ஆண்டு நடந்த கும்பமேளா நிகழ்ச்சியின் போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பிரியங்காவின் தாயுமான சோனியா காந்தி, புனித நீராடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியங்கா, இதுவரை அரசியல் நுழைவைத் தள்ளிப் போட்டதற்குக் காரணம், குழந்தைகளை சரியாக கவனித்துக் கொள்ள முடியாது என்பதால்தான். ஆனால், இப்போது அனைத்துப் பொறுப்புகளையும் கையாள பிரியங்கா தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியுடன், பிரியங்காவிற்கு கிழக்கு உத்தர பிரதேச பொறுப்பாளர் பதவியும் கொடுக்கப்பட்டுள்ளது. அங்குதான் பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதி மற்றும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தொகுதி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியங்கா, அதிகாரபூர்வமாக தற்போது அரசியல் என்ட்ரி கொடுத்திருக்கலாம். ஆனால், கடந்த பல ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகள் எடுக்கும் குழுவில் அவர் இருந்தார். அது மட்டுமல்லாமல் சோனியா மற்றும் ராகுலின் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளின் பொறுப்பாளராகவும் அவர் செயல்பட்டு வந்தார்.