கர்நாடக சட்டசபையின் மொத்த பலம் 225. நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 20 எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்கவில்லை
New Delhi: கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி சார்பில் அமைந்திருந்த ஆட்சி கவிழ்ந்துள்ளது. அம்மாநிலத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏ-க்கள், பாஜக முகாம் நோக்கி சென்றதால், நேற்று அம்மாநில சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் கூட்டணி அரசு, பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறிவிட்டது. பாஜக, தனது மெஜாரிட்டியை நிரூபித்துள்ளது. இதனால், அக்கட்சியின் எடியூரப்பா, மீண்டும் கர்நாடக முதல்வராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பரபரப்பான அரசியல் சூழல் குறித்து காங்கிரஸின் பிரியங்கா காந்தி வத்ரா, “எல்லாவற்றையும் பணம் கொடுத்து வாங்க முடியாது என்கிற உண்மையை பாஜக ஒருநாள் உணரும். அவர்களின் அனைத்து பொய்களும் ஒரு நாள் வெளிச்சத்துக்கு வரும். அதுவரை இந்நாட்டின் குடிமக்கள் அவர்களின் ஊழல்களைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்” என்று ஆதங்கப்பட்டுள்ளார்.
கர்நாடக சட்டசபையின் மொத்த பலம் 225. நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 20 எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்கவில்லை. இதில் 16 அதிருப்தி எம்.எல்.ஏ-க்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ்- மஜத கூட்டணிக்கு 99 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. ஆனால், பாஜக-வுக்கு 105 வாக்குகள் கிடைத்தன. இதனால், அந்தக் கட்சி மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.
கர்நாடகத்தில் இப்படி ஆட்சி கவிழ்ப்பு நடந்ததற்கு, பாஜக-வின் குதிரை பேர அரசியல்தான் காரணம் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. காங்கிரஸின் ராகுல் காந்தியோ, “ஜனநாயகம், நேர்மை மற்றும் கர்நாடகாவின் மக்கள் இன்று தோற்றுவிட்டனர்” என்று பாஜக-வின் பெயரைக் குறிப்பிடாமல் ட்வீட்டியுள்ளார்.
அதே நேரத்தில் பாஜக, இந்த அரசியல் பரபரப்பு குறித்து, “மஜத-வுக்கும் காங்கிரஸுக்கும் இடையில் அமைந்தது கூட்டணியே அல்ல. அது சந்தர்ப்பவாதக் கூட்டணி. கர்மாவின் விளையாட்டுதான் இது” என்று கருத்து கூறியுள்ளது.