சமூக வலை தளங்களில் புடவை சேலஞ்ச் பரவி வருகிறது.
புடவை சேலஞ்சை ஏற்றுக் கொண்ட காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி 22 ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ் அள்ளி வருகிறார்.
சேலஞ்ச் என்ற பெயரில் அவ்வப்போது சமூக வலைதளங்களில் சம்பவங்கள் நடப்பது உண்டு. ஒரு செயலை செய்து அதனை மற்றவர்களும் செய்ய முடியுமா என்று சவால் விடுக்கும் வகையில் இது அமையும். சமீபத்தில் பாட்டில் சேலஞ்ச் உலகம் முழுவதும் வைரலாக இருந்தது.
இதன்படி பாட்டில் மூடியை ஒருவர் காலால் திறக்க வேண்டும். இந்த சேலஞ்சில் நடிகர், நடிகைகள், அரசியல் பிரபலங்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பாட்டிலை திறந்தனர்.
தற்போது புடவை சேலஞ்ச் #SareeTwitter என்ற பெயரில் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. இதில் புடவை கட்டி ஒருவர் புகைப்படங்களை பதிவு செய்ய வேண்டும். இதில் நடிகைகள், பெண் அரசியல் பிரபலங்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த சேலஞ்சை தற்போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஏற்றுக் கொண்டு 22 ஆண்டுக்கு முந்தைய ஃபோட்டோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற தினத்தன்று அதிகாலை நேர பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டபோது எடுத்த புகைப்படம் என்று ட்விட்டரில் தனது புகைப்படத்தை பிரியங்கா பதிவு செய்துள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள நெட்டிசன்கள், திருமணநாள் வாழ்த்துக்கள் என்று ஆயிரக்கணக்கில் ரீப்ளே செய்தனர். இதனைப் பார்த்த பிரியங்கா, வாழ்த்துக்களுக்கு நன்றி, ஆனால் எனது திருமண நாள் பிப்ரவரியில் வருகிறது என்று பதில் அளித்துள்ளார். பிரியங்காவின் புகைப்படம் லைக்ஸ்களை குவித்துள்ளது.