முகமது சனவ்லா, சுமார் 30 ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து அவர் அசாம் எல்லைப் பாதுகாப்புப் படையில் அதிகாரியாக சேவை செய்தார்.
ஹைலைட்ஸ்
- குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர் பெயர் முகமது சனவ்லா
- அவர், 30 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றினார்.
- அதைத் தொடர்ந்து அசாம் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றினார்
Guwahati: இந்திய ராணுவத்தில் சுமார் 30 ஆண்டுக்கு மேலாக பணியாற்றிய முகமது சனவ்லா என்பவர், சட்டத்துக்கு விரோதமாக குடியேறியிருப்பவர் என்று பகீர் புகார் சுமத்தப்பட்டு சில நாட்களுக்கு முன்னர் சிறை வைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மீது புகார் கொடுத்ததாக கூறப்படும் 3 பேர், “இந்த வழக்கு தொடர்பாக எங்களிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. சந்திரமால் தாஸ் என்பவர்தான் இந்த வழக்கை விசாரித்து வருகிறார். அவர் வேண்டுமென்றே இந்த வழக்கில் தவறான தகவல்களை அளித்துள்ளார்” என்று கூறி அதிகாரி சந்திரமால் தாஸ் மீது காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
முகமது சனவ்லா, சுமார் 30 ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து அவர் அசாம் எல்லைப் பாதுகாப்புப் படையில் அதிகாரியாக சேவை செய்தார். அவர் மீது ‘சட்டவிரோதமாக நாட்டில் குடியேறியுள்ளார்' என்று குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கும் இந்த விஷயம் குறித்து விசாரணை அதிகாரியான சந்திரமால் தாஸ், NDTV-யிடம் பேசும்போது, “நான் முகமது சனவ்லா குறித்து விசாரணை செய்யவில்லை. நான் விசாரணை செய்த நபரின் பெயரும் சனவ்லா என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பதில் இவர் மீது தவறுதலாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது” என்று விளக்கம் கொடுத்துளார்.
அதே நேரத்தில் முகமது சனவ்லாவின் கிராமத்தில் இருந்த நபர்கள், எப்படி இவரது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர் என்பது குறித்து இதுவரை தெளிவில்லை.
வழக்கில் விசாரணை நபர்களாக சேர்க்கப்பட்டுள்ள குரான் அலி என்பவர், “நான் தாஸ் என்கிற அதிகாரியை இதுவரை சந்தித்ததே இல்லை. நான் எந்த விசாரணைக்கும் உட்படுத்தப்படவும் இல்லை. 2008-2009 ஆம் ஆண்டுதான் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது நான் என் சொந்த ஊரிலேயே இல்லை. முகமது சனவ்லாவும் ராணுவத்தில் பணியாற்றி வந்தார்“ என்று கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
இதைத் தொடர்ந்து வழக்கில் விசாரணை செய்யப்பட்டதாக சொல்லப்படும் குரான் அலி, ஷபன் அலி, அம்ஜத் அலி ஆகியோர், அதிகாரி தாஸுக்கு எதிராக போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.
அசாமில் ‘தேசிய குடிமக்கள் பதிவு' விவகாரம் தொடர்ந்து பிரச்னையாகி வருகிறது. இந்நிலையில், ஒரு ராணுவ வீரருக்கே ‘சட்டவிரோத குடியேறியவர்' என்ற குற்றச்சாட்டில் உடனடியாக சிறைவாசம் அளிக்கப்பட்டுள்ளது அங்கு பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.