This Article is From Dec 04, 2019

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை தடை செய்க: உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக சார்பில் ஏற்கனவே தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக நாளை விசாரிக்க உள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை தடை செய்க: உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை தடை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதுதொடர்பான வழக்கை அண்மையில் விசாரித்த உச்ச நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை டிசம்பர் 13ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, டிச.2ம் தேதி தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது. இதனை மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி கிராமப்புற ஊராட்சித் தேர்தலுக்கான தேதி மட்டுமே அறிவிக்கப்பட்டது. வேட்பு மனுத்தாக்கல் டிசம்பர் 6ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 13ம் தேதியாகும், தொடர்ந்து, வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான  கடைசி தேதி டிசம்பர் 18 ஆகும். 

இதையடுத்து, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் டிசம்பர் 27ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 30ம் தேதியும் நடைபெறுகிறது. இதன் பின்னர் தேர்தல் முடிவுகள் ஜனவரி 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படாததற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்தன. 

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தொகுதி வார்டு மறுவரையறை பணிகள் நிறைவடைந்த பின் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதனால் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என கோரி மனு அளித்துள்ளது. தேர்தல் நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் பிரமாண பத்திரம் தாக்கல் தொடர்பான விசாரணை, உச்சநீதிமன்றத்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் திமுக சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக சார்பில் ஏற்கனவே தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக நாளை விசாரிக்க உள்ளது. அத்துடன் 5 புதிய மாவட்டங்களின் வாக்காளர்கள் தொடர்ந்த மனுவையும் உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது

.