This Article is From May 29, 2019

ஜாக்டோ-ஜியோ போராட்டம்: நடவடிக்கைக்கு ஆளான ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு ரத்து!

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்று நடவடிக்கைக்கு ஆளான ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இல்லை என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

ஜாக்டோ-ஜியோ போராட்டம்: நடவடிக்கைக்கு ஆளான ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு ரத்து!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் செய்ய வேண்டும் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவில் அங்கம் வகிக்கும் ஆசிரியர்கள், மற்றும் அரசு ஊழியர்கள் கடந்த ஜன.22-ம் தேதி முதல் தொடங்கி தொடர்ந்து 9 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும், மாணவர்கள் கல்வி பாதிக்கக்கூடும் என்பதால் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும்படி அரசு பலமுறை வேண்டுகோள் விடுத்தது. ஆனாலும் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிடாமல் இருந்ததால் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்தது.

இதைத்தொடரந்து, இறுதியாக பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டு, இனி பணிக்கு திரும்பி வர அவகாசம் கொடுக்கப்படாது என்றும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. பின்னர் போராட்டத்தை வாபஸ் பெற்று ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது பள்ளி கல்வித்துறை ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 4 ஆயிரத்திற்கும் மேலான ஆசிரியர்களுக்கு 17-பி விதியின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. தற்போது பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, ஜுன், ஜூலை மாதத்தில் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுகிறது.

இதில், போராட்டத்தில் ஈடுபட்டு 17-பி விதியின் கீழ் தண்டனை பெற்ற 4 ஆயிரம் ஆசிரியர்கள் பெயர் பதவி உயர்வு பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளி கல்வித்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

.