This Article is From Sep 24, 2019

கடலுக்கு அடியில் காதலிக்கு ப்ரபோஸ் செய்த இளைஞர்… 'Yes' என்று சொல்வதற்குள் உயிர்பிரிந்த சோகம்!

அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவ் வெபர் மற்றும் ஆண்டோன் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.

கடலுக்கு அடியில் காதலிக்கு ப்ரபோஸ் செய்த இளைஞர்… 'Yes' என்று சொல்வதற்குள் உயிர்பிரிந்த சோகம்!

நீருக்கு அடியில் 30 அடி ஆழத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இருவரும் தங்கியுள்ளனர்.

தங்களது காதலை வித்தியாசமான முறையில் தனது காதலருக்கு தெரியப்படுத்துவது இப்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஆனால் இந்த விபரீத ஆசையால் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் சோகக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவ் வெபர் மற்றும் ஆண்டோன் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் டான்சானியாவில் உள்ள பெம்பா தீவுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். கடல் நீருக்கு அடியில் 30 அடி ஆழத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இருவரும் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஸ்டீவ் தனது காதலை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக ஆழமான அந்த கடலில் தண்ணீருக்குள் இறங்கியுள்ளார். தன்னுடைய காதல் கடிதத்தை தனது காதலியிடம் கண்ணாடி வழியாக காண்பித்துள்ளார்.அதில், ‘நான் உன்னை எந்த அளவிற்கு காதலிக்கிறேன் என்பதை சொல்லும் அளவிற்கு என்னால் இந்த நீரில் மூச்சை அடக்க முடியாது.
 

ஆனால் நான் உன்னை முழுவதுமாக காதலிக்கிறேன். தினமும் எனது காதல் அதிகரிக்கிறது. நீ என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா?' என்று அதில் எழுதப்பட்டிருந்தது. மேலும் அவர் திருமண மோதிரத்தையும் எடுத்துக் காண்பித்துள்ளார்.

அவரது காதலி இதனையெல்லாம் உள்ளே இருந்து வீடியோ எடுத்துள்ளார். அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் துள்ளி  குதித்துள்ளார். ஆனால் அவர் தனது சம்மதத்தை தெரிவிப்பதற்குள் அங்கே எதிர்பாராதவிதமாக சோகமான மற்றொரு சம்பவம் நடந்துவிட்டது. ஸ்டீவ் மூச்சுத்திணறி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக அஞ்சப்படுகிறது. ஹோட்டல் ஊழியர்கள் எவ்வளவு போராடியும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
 

9g8g3ego

அவரது காதலி ஆண்டோன் அந்த வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், ‘நீ என்னுடைய பதிலை கேட்காமலேயே சென்று விட்டாய். உன்னை திருமணம் செய்து கொள்ள எனக்கு சம்மதம். நமது வாழ்வின் மிக மகிழ்ச்சியான ஒரு நாள் மிகத் துயர நாளாக மாறிவிட்டது. இந்த மோசமான விதியை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை' என உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இந்த சம்பவம் பலரையும் சோகக் கடலில் ஆழ்த்தியுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.