Shaheen Bagh: கடந்த 118 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் கடுங்குளிர் நிலவிய நிலையில் இந்தப் போராட்டம் நடந்தது.
ஹைலைட்ஸ்
- 2 வாரங்களாக டெல்லியில் போராட்டம் நடந்து வருகிறது
- பெண்களே போராட்டத்தில் அதிகம் பங்கேற்று வருகின்றனர்
- உள்ளூர் வாசிகள் போராட்டக்காரர்களுக்கு உணவுகளை கொடுக்கின்றனர்
New Delhi: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக போராட, நேற்றிரவு தெற்கு டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் பலர் கூடியிருந்தனர். புத்தாண்டு தொடங்கிய நேரத்தில் போராட்டக்காரர்கள், தேசிய கீதம் பாடி தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். குடியுரிமை திருத்தச் சட்டமான சிஏஏ மூலம், மத ஒடுக்குமுறைக்கு ஆளான 3 அண்டை நாட்டவருக்குக் குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
டெல்லியைப் பொறுத்தவரை, கடந்த 2 வாரங்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஷாஹீன் பாக் பகுதியில் பெண்களே போராட்டத்தில் அதிகம் பங்கேற்றனர். கடந்த 118 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் கடுங்குளிர் நிலவிய நிலையில் இந்தப் போராட்டம் நடந்தது. பல பெண்கள், போராட்டத்துக்குத் தங்களது குழந்தைகளோடு வந்திருந்தனர்.
அதில் 33 வயதாகும் சாய்மா, “என் குழந்தைகளுக்கு எதிர்காலம் இல்லை என்பதைப் பார்க்க முடிகிறது. அவர்களின் எதிர்காலத்தைக் காக்கப் பெண்ணாக நான் இன்று போராடுகிறேன். எங்கள் உரிமை எங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். இது என்னுடைய போராட்டம் மட்டுமல்ல. இது சட்ட சாசனத்தைக் காக்க செய்யப்படும் போராட்டம். போதிய ஆவணங்கள் இல்லாமல் பல இந்தியர்கள் இந்தச் சட்டம் மூலம் பாதிக்கப்படுவார்கள்,” என்று குமுறுகிறார். தன் ஒரு குழந்தைக்குப் பாலூட்டும் அந்த தாய், தனது பிஞ்சுகளை உறங்க வைத்துவிட்டு போராட்டக் களத்துக்குப் புரப்பட இருப்பதாகச் சொல்கிறார். சாய்மா பங்கேற்கும் முதல் போராட்டம் இது.
சிலர் குழந்தைகளோடுதான் போராட்டக் களத்திற்கு வருகின்றனர், “2014 ஆம் ஆண்டு ஜாமியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவள் நான். மதம் சார்ந்து அங்கு பாகுபாடு காட்டப்பட்டது இல்லை. முதன்முறையாக அதைப் போன்ற ஒரு பாகுபாடு காட்டப்படுகிறது. அதனால் கடுமையாக எதிர்க்கிறேன்,” என்கிறார் ஒரு வயதுக் குழந்தையின் தாயான சாஜிதா கான்.
Citizenship (Amendment) Act-க்கு எதிராக டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது (PTI)
இந்தப் போராட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு உணவுகளை உள்ளூர் வாசிகள் வழங்குகின்றனர். மற்ற அத்தியாவசியத் தேவைகள் சமூக ஊடகங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறது.
90 வயதாகும் அஸ்மா காதூன், ஷாஹீன் பாக்கில் தினமும் மதியம் 3 மணி முதல் 9 மணி வரை போராட்டத்தில் பங்கேற்று வருகிறார். “நாங்கள் சட்ட சாசனத்துக்காகவும் அனைவரின் நலனுக்காகவும் போராடி வருகிறோம். என்னிடம் ஆவணங்களைக் கேட்போரிடம் நான் கேட்கிறேன், உங்களின் முன்னோர்களின் பெயர்களைப் பட்டியலிடுங்கள் பார்ப்போம்? கடந்த 7 தலைமுறைகளாக இங்கே வாழ்ந்த என் குடும்பத்தினர் பற்றிய விவரங்களை என்னால் காட்ட முடியும்,” என்று கொதிக்கிறார் அஸ்மா.
ஷாஹீன் பாக்கில், 2019 ஆம் ஆண்டின் கடைசி இரவில் தேசியக் கொடிகளுடன் பலர் போராட வந்திருந்தனர். பலர், சிஏஏவுக்கு எதிரான பதாகைகளுடன் வந்திருந்தனர். மணி சரியாக 12 ஆனவுடன், எல்லோரும் தேசிய கீதம் பாடி புத்தாண்டை வரவேற்றனர்.
மதத்தின் அடிப்படையில் இந்தியாவில் குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் வகையில் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் திருத்திற்கு, ‘இந்திய அளவில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில்' மிகப் பெரும் எதிர்ப்பு இருப்பதாக சொல்கிறது காங்கிரஸ்.
அதே நேரத்தில் இந்தக் குற்றச்சாடுகளை மறுக்கும் மத்திய அரசு தரப்பு, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து மத ஒடுக்குமுறையால் வெளியேறும் அந்நாட்டுச் சிறுபான்மையினருக்கு இந்தச் சட்டம் பாதுகாப்பை வழங்கும் என்கிறது. இந்திய சட்ட சாசனத்தின் மதச்சார்பின்மை இந்தச் சட்டத்தின் மூலமாக பாதிக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள் சட்டத்தை விமர்சிப்பவர்கள்.