This Article is From Jul 23, 2018

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதிகளில் போராட்டம் நடத்த மீண்டும் அனுமதி : உச்சநீதிமன்றம்

டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை உச்சநீதிமன்றம் இன்று நீக்கியுள்ளது

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதிகளில் போராட்டம் நடத்த மீண்டும் அனுமதி : உச்சநீதிமன்றம்
New Delhi:

டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை உச்சநீதிமன்றம் இன்று நீக்கியுள்ளது. மேலும், இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் மற்றும் போட் கிளப் பகுதிகள் போராட்டம் நடப்பது வழக்கம். பல ஆண்டுகளாக போராட்டக்காரர்கள் இந்த இடங்களில் தான் தங்களது போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த சிலர் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்துவதால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதாக பசுமைத் தீர்ப்பாயத்தில் கடந்த ஆண்டு புகார் அளித்தனர்.

இந்த புகாரை விசாரித்த பசுமைத் தீர்ப்பாய நீதிபதிகள், ஜந்தர் மந்தர் மற்றும் போட் கிளப் பகுதிகளில் போராட்டம் நடத்தவும், ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தவும் தடை விதித்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீர்ப்பளித்தனர்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே சிக்ரி, அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பில், போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமை. அதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. எனவே, ஜந்தர் மந்தர், போட் கிளப், இந்தியா கேட் ஆகிய பகுதிகளில் போராட்டம் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், மத்திய, மாநில அரசு, காவல்துறை ஆகியோர் இரண்டு வாரங்களுக்குள்ளாக போராட்டம் நடத்த வழிகாட்டு நெறிமுறைகளை குறித்து தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

.