இந்தியாவில் ஏதேச்சதிகார ஆட்சி நடப்பதாக போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குற்றம் சாட்டினர்.
ஹைலைட்ஸ்
- CAA க்கு ஆதரவு தெரிவித்து பட்னாவீஸ் தலைமையில் பேரணி நடந்தது
- CAA எதிர்ப்பு போராட்டத்தில் நடிகர்கள், பிரபலங்கள் கலந்து கொண்டனர்
- டெல்லி, கொல்கத்தாவிலும் எதிர்ப்பு போராட்டம் இன்று நடந்தது.
Mumbai: மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே 2 இடங்களில் இன்று குடியுரிமை சட்ட எதிர்ப்பு மற்றும் ஆதரவு போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சட்ட திருத்தத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
தேசிய குடிமக்கள் பதிவேடான என்.ஆர்.சி.க்கு எதிராகவும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. தெற்கு மும்பையில் இருக்கும் ஆசாத் மைதானத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் ஒன்று கூடினர். இதேபோன்று மும்பையில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆகஸ்ட் கிராந்தி மைதானத்திலும் நூற்றுக்கணக்கானார் திரண்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தின்போது NDTVக்கு பேட்டியளித்த சமூக செயற்பாட்டாளர் ஒருவர், குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை பணமதிப்பிழப்பு நடவடிக்கையை போன்றதாகும் என்று கூறினார்.
'CAA, NRC மற்றும் NPR ஆகியவை மதம் சார்பான பிரச்னை மட்டும் அல்ல. அது எல்லோரையும் பாதிக்கும். பணமதிப்பிழப்பு பார்ட் 2 வருவதற்கு நாங்கள் விரும்பவில்லை' என்று அவர் தெரிவித்தார்.
மாணவர் ஒருவர் கூறுகையில், 'NPR என்பது NRC கொண்டு வருதற்கான முதல் நடவடிக்கை. எங்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சட்டம் திரும்பப் பெறப்படும் வரையில் எங்களது போராட்டம் தொடரும்' என்றார்.
இன்னொரு போராட்டக்காரர் ஒருவர் கூறுகையில்,'எதேச்சதிகார அரசு இப்போது ஆண்டு கொண்டிருக்கிறது. தங்களால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று அவர்கள் கருதுகிறார்கள். இந்த அரசு அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும். எதிர்க்க கூடாது' என்றார்.
குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து நடிகர்களும், பிரபலங்களும் கூட ஆசாத் மைதானத்தில் ஒன்று திரண்டனர்.
.
இதேபோன்று குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரித்து ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவீஸ் தலைமையில் பேரணி நடைபெற்றது.
மேடையில் மிகப்பெரிய தேசியக் கொடி, சாவர்க்கரின் போஸ்டர் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. சாவர்க்கரின் பேரனான ரஞ்சித் சாவர்க்கரும் இந்த பேரணியில் கலந்து கொண்டார்.
கடந்த வாரம் இங்கு நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு போராட்டத்தை மாணவர்கள் ஒருங்கிணைத்தனர். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள்.
மும்பையை தவிர்த்து இன்று கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய இடங்களிலும் எதிர்ப்பு போராட்டங்கள் நடந்தன.
மதத்தின் அடிப்படையில் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க குடியுரிமை சட்ட திருத்தம் வகை செய்கிறது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்க தேசத்திலிருந்து மத அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்த சட்டம் குடியுரிமையை வழங்கும்.
இந்த சட்டம் முஸ்லிம்களுக்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும் விரோதமானது என்று கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
என்.பி.ஆர். எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை நடைமுறைப்படுத்த மத்திய அரசு கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. இது என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இது சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் வந்தவர்களை வெளியேற்ற உதவும். இவை முஸ்லிம்களை குறி வைத்து பாஜக அரசு கொண்டு வந்திருப்பதாக கூற போராட்டங்கள் நடக்கின்றன.