This Article is From Jan 24, 2020

“5,8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒரு உளவியல் தாக்குதல்…”- கொதிக்கும் திருமா!!

பல தரப்பினரும் இந்த புதிய பொதுத் தேர்வு முறையைக் கடுமையாக சாடிவருகிறார்கள்.

Advertisement
தமிழ்நாடு Written by

"12 ஆம் வகுப்பில் மட்டும் தேர்வு வைத்தால் போதும் என்கிறோம்"

தமிழகத்தில் 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முறை இந்த ஆண்டு முதல் அமல் செய்யப்படுகிறது. இந்த நடவடிக்கையால் மாணவர்கள், உளவியல் ரீதியாக பாதிப்படைவார்கள் என கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அப்படி இருந்தும், பொதுத்தேர்வு நடத்தும் முடிவில் இருந்து தமிழக பள்ளிக் கல்வித்துறை பின்வாங்கவில்லை. திட்டமிட்டபடி 5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கொதிப்புடன் பேசியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமா, “ஏற்கெனவே 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்தப்படுவதால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். 10 ஆம் வகுப்புத் தேர்வே வேண்டாம் என்று பேசி வருகிறோம். 12 ஆம் வகுப்பில் மட்டும் தேர்வு வைத்தால் போதும் என்கிறோம். ஆனால், தற்போது 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு என்கிற புது நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது தமிழக அரசு. 

இந்த நடவடிக்கை என்பது மாணவர்களின் மீதான தாக்குதலாகவே பார்க்க வேண்டும். இது பிஞ்சுகள் மீது நடத்தப்படும் உளவியல் தாக்குதல். தமிழக அரசு இந்த புதிய நடவடிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இந்த நடவடிக்கை என்பது பள்ளி இடைநிற்றலை அதிகரிக்கும். மாணவர்கள் பள்ளிக்கு தொடர்ந்து வருவதை தடுத்துவிடும்,” என்று காட்டமாக  கருத்து தெரிவித்துள்ளார். 

Advertisement

பல தரப்பினரும் இந்த புதிய பொதுத் தேர்வு முறையைக் கடுமையாக சாடிவருகிறார்கள். ஆனால், எதற்கும் அசைந்து கொடுக்க அதிமுக அரசு தயாராக இல்லை என்றே தெரிகிறது. 

Advertisement