5 மற்றும் 8-ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டுமேன மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் தெரிவித்திருக்கிறது.
மத்திய அரசின் அறிவிப்பின்படியே 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டு முதல் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கட்டாயமாக்கப்படுவதாக நேற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், 2019 - 2020ஆம் கல்வியாண்டிலிருந்து 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தேர்வு முடிவின் அடிப்படையில் முதல் 3 ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்த வேண்டாம் என அரசு ஆணையிடுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது, அனைத்து பள்ளிகளிலும் 5 மற்றும் 8-ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டுமேன மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை மூன்றாண்டு காலம் இதற்கு விதிவிலக்கு அளிக்கப்படும். மூன்றாண்டு காலத்திற்கு 5 மற்றும் 8-ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதலாம். ஆனால் மூன்றாண்டுகளுக்கு பின்னர் தான் யார் தேர்ச்சி பெறுகிறார்கள்..? பெறவில்லை என்ற விவரங்கள் பட்டியலிப்படும்.
ஒன்றிலிருந்து 8 வரை படித்துவிட்டு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு செல்லும் போது மாணவர்களால் மத்திய அரசின் பொதுத் தேர்வுகளை சந்திக்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே 5 மற்றும் 8-ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு கொண்டுவரப்படும் போது மாணவர்களின் கற்றல் திறன் எவ்வாறு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
இப்போது 5 மற்றும் 8-ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு வருவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. இந்த நடைமுறைக்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுவரை மூன்றாண்டுகளுக்கு நாங்கள் விதிவிலக்கு அளிக்கிறோம். மூன்றாண்டு வரையிலும் மாணவர்களின் கல்வித் திறனை படிப்படியாக அதிகரிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது என்றார்.
மேலும் பேசிய அவர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் திறனை அறிய பொதுத்தேர்வு உதவும். தமிழகத்தில் இருமொழி கொள்கைதான் நிலைத்திருக்கும் என்று கூறினார்.
அண்மையில், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவரப்பட்டு மத்திய அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு கல்வி ஆண்டின் முடிவிலும் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும்.
அந்த தேர்வில் தோல்வியுறும் குழந்தைகள் தேர்வு முடிவுகள் வெளியான இரண்டு மாதங்களுக்குள் மறுதேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். தொடக்க கல்வியை முடிக்கும் வரை எந்த குழந்தையும் பள்ளியில் இரு்ந்து வெளியேற்றக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.