புதுவையில் துணை நிலை கவர்னர் நியமித்த 3 பாஜக எம்எல்ஏக்களின் நியமனம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
புதுவையில் துணை நிலை கவர்னர் கிரண்பேடி பாஜகவினரான சாமிநாதன், செல்வ கணபதி, சங்கர் ஆகிய 3 பேரை எம்எல்ஏக்களாக நியமனம் செய்தார். இது செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதனை விசாரித்த நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு கடந்த மார்ச் 22-ம்தேதி உத்தரவு பிறப்பித்தது.
அந்த உத்தரவில், யூனியன் பிரதேசங்களில் துணை நிலை கவர்னருக்கு எம்எல்ஏக்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளது. அவ்வாறு நியமிக்கப்பட்ட எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் சட்டசபை தலைவருக்கு இல்லை. இதுகுறித்து குடியரசு தலைவரிடம்தான் முறையிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
மேலும் 3 எம்எல்ஏக்களின் நியமனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்து உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து புதுவை முதல்வர் நாராயணசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று அளித்துள்ள உத்தரவில், புதுவையில் துணை நிலை கவர்னர் நியமித்த 3 பாஜக எம்எல்ஏக்களின் நியமனம் செல்லும் என்றும், இந்த விவகாரத்தில் தலையிடும் அதிகாரம் புதுவை அரசுக்கு இல்லை என்றும் கூறியுள்ளது.