This Article is From Feb 12, 2020

சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய முதல் யூனியன் பிரதேசம்- புதுச்சேரி அரசின் அதிரடி!

"சிஏஏவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 147 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேவைப்பட்டால் நானே தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர்வேன்"

சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய முதல் யூனியன் பிரதேசம்- புதுச்சேரி அரசின் அதிரடி!

இந்த தீர்மானத்துக்கு புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த மசோதாவான சிஏஏவுக்கு எதிராக புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்னரே கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் சிஏஏவுக்கு எதிராக தீர்மானத்தை, தங்களது சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளன. அதே நேரத்தில் குடியுரிமை மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் முதல் யூனியன் பிரதேசமாக புதுச்சேரி திகழ்கிறது. 

இன்று சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்காகவே புதுச்சேரி மாநில சட்டப்பேரவை கூடியுள்ளது. இந்த சிறப்புக் கூட்டத்தில் சிஏஏவுக்கு எதிரான தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்தார். அதற்குப் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கவே, அது அவையில் நிறைவேறியது. இந்த தீர்மானம், மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, “இந்தியா என்பது பல்வேறு இனக்குழுக்கள், மதத்தினர் வாழும் நாடு. இங்கு மக்களை மதத்தின் பெயரால் பிரிக்கும் எந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டாலும் அதை புதுச்சேரி மாநில மக்களும் நாங்களும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். யார் அப்படியொரு சட்டத்தைக் கொண்டு வந்தாலும் அதை நாங்கள் எதிர்ப்போம்.” என்று திட்டவட்டமாக தெரிவித்தார். 

அவர் மேலும், “மத்திய அரசு, புதுச்சேரி அரசுக்கு எதிராக செயல்பட்டால் அதை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம். சிஏஏவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 147 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேவைப்பட்டால் நானே தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர்வேன்,” என்று அதிரடியாக பதில் அளித்தார். 

இந்த தீர்மானத்துக்கு புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவர், முதல்வர் நாராயணசாமிக்கு அனுப்பிய கடிதத்தில், “நாடாளுமன்றத்தில் சிஏஏவுக்கு ஒப்புதல் கிடைத்து அது சட்டமாக அமலுக்கு வந்துள்ளதால் அதற்கு எதிராக புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடாது,” எனக் குறிப்பிட்டிருந்தார்.
 

.