This Article is From Dec 20, 2019

“எந்த விலை கொடுத்தேனும்…”- CAA-வுக்கு எதிராக போர் முழக்கமிடும் புதுவை முதல்வர்!

CAA Protests - “மக்களவையிலும் மாநிலங்களவையிலும் மிருக பலம் இருக்கும் காரணத்தால், மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது"

Advertisement
இந்தியா Written by

CAA Protests - "புதுச்சேரி முதல்வராக சொல்கிறேன், எங்கள் மாநிலத்தில் இந்தச் சட்டத்தை அமல் செய்ய அனுமதிக்க மாட்டோம்"

CAA Protests - குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. தலைநகர் டெல்லியில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு சில இடங்களில் இணைய மற்றும் மொபைல் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சிகள், சிறிய அமைப்புகள் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்களை அரங்கேற்றி வருகின்றன. இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பேசியுள்ள புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, “எந்த விலை கொடுத்தேனும் இந்த ஏற்றுக் கொள்ள முடியாத சட்டத்தை எதிர்ப்போம்,” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் பேசுகையில், “மக்களவையிலும் மாநிலங்களவையிலும் மிருக பலம் இருக்கும் காரணத்தால், மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. ஆனால், புதுச்சேரி முதல்வராக சொல்கிறேன், எங்கள் மாநிலத்தில் இந்தச் சட்டத்தை அமல் செய்ய அனுமதிக்க மாட்டோம். எப்பாடு பட்டாவது, எந்த விலை கொடுத்தாவது இந்தச் சட்டத்தை எதிர்ப்போம்,” என்று உறுதிபட தெரிவித்துள்ளார். 

இதனிடையே, குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் எதிர்கட்சியினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல பகுதிகளில் போராட்டக்காரர்கள் போலீசாரிடையே வன்முறை ஏற்பட்டு வருகிறது. தமிழகத்திலும் பல இடங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Advertisement

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள கல்லூரி, பல்கலைக்கழங்களுக்கு நாளை முதல் ஜன.1 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ், உள்ளாட்சித் தேர்தல், புத்தாண்டையொட்டி கல்லூரி, பல்கலைக்கழங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அளவில் போராட்டத்தில் ஈடுபட்ட திரைப்பட நடிகர் சித்தார்த், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உட்பட 600 பேர் மீது தமிழக அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது. 

Advertisement

முன்னதாக இந்தப் போராட்டங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த், எந்த பிரச்னைக்கும் தீர்வு காண வன்முறையும், கலவரமும் ஒரு வழி ஆகிவிடக் கூடாது. தேசப்பாதுகாப்பையும் நாட்டு நலனையும் மனதில் கொண்டு இந்திய மக்கள் ஒற்றுமையுடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும். தற்போதைய வன்முறைகள், மனதுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது என்று கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisement