கிரண்பேடி வாட்ஸ்அப் குழு ஒன்றை ஆரம்பித்து, அதன் மூலம் காவல்துறையினருக்கு உத்தரவு போட்டபோது, உரசல் போக்கு மேலும் அதிகரித்தது.
New Delhi: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக மதுரைக் கிளை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில், ‘ஆளுநருக்கு தனியாக செயல்படும் உரிமை கிடையாது' என்று சில நாட்களுக்கு முன்னர் தீர்ப்பளிக்கப்பட்டது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் கிரண்பேடி. உச்ச நீதிமன்றமும் அவருக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிமன்ற அமர்வுக்கு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. கிரண்பேடி மற்றும் மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அப்போது அவர் கிரண்பேடிக்கு ஆதரவாக வாதாடினாலும், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது உச்ச நீதிமன்றம்.
2016 ஆம் ஆண்டு, புதுச்சேரி ஆளுநராக கிரண்பேடி பதவியேற்றதில் இருந்தே அவருக்கும், ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசுக்கும் தொடர்ந்து பிரச்னை இருந்து வருகிறது. புதுச்சேரி அரசு, ‘கிரண்பேடி மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் அரசுத் திட்டங்களுக்கு அனுமதி கொடுப்பதில் சுணக்கம் காட்டி வருகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்காமல் நடந்து கொள்கிறார்' என்று குற்றம் சாட்டியது. கிரண்பேடி புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளும் வாராந்திர விசிட்டுகளையும் காங்கிரஸ் அரசு விமர்சித்தது.
இதைத் தொடர்ந்துதான் கடந்த பிப்ரவரி மாதம், புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு எதிரில் தர்ணா போராட்டத்தில் முதல்வர் நாராயணசாமி ஈடுபட்டார். ஒரு வாரத்துக்கு இந்தப் போராட்டம் நடந்து, தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது.
கிரண்பேடி வாட்ஸ்அப் குழு ஒன்றை ஆரம்பித்து, அதன் மூலம் காவல்துறையினருக்கு உத்தரவு போட்டபோது, உரசல் போக்கு மேலும் அதிகரித்தது.
அதேபோல கிரண்பேடி பாஜக-வைச் சேர்ந்த 3 பேரை, மத்திய அரசு பரிந்துரை செய்த எம்.எல்.ஏ-க்களாக அங்கீகரித்தார். அவர்களை புதுச்சேரி சட்டசபை சபாநாயகர், சபைக்குள் அனுமதிக்க மறுத்தார். பின்னர் உச்ச நீதிமன்றம் கிரண்பேடிக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.
இப்படி அடுக்கடுக்காக கிரண்பேடி மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டாலும், ‘நான் சட்டப்படிதான் அனைத்தையும் செய்து வருகிறேன். ரப்பர் ஸ்டாம்ப் ஆளுநராக நான் இருக்கமாட்டேன்' என்று கருத்து தெரிவித்தார்.