சிலை திறப்பு விழாவில் ராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Tamulpur, Assam: புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவருக்கு கிராம மக்கள் முழு உருவச்சிலையை அமைத்துள்ளனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம்தேதியன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தின்போது துணை ராணுவமான ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் நேற்று புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவு கூட்டம் நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
புல்வாமா சம்பவத்தில் அசாம் மாநிலம் தமுல்பூரை சேர்ந்த மனேஷ்வர் பசுமதாரி என்ற வீரர் உயிரிழந்தார். இவர் ரிசர்வ் போலீஸ் படையில் தலைமைக் காவலராக இருந்தவர்.
பசுமதாரிக்கு அவரது சொந்த கிராமத்தில் ஊர் மக்கள் சேர்ந்த முழு உருவச் சிலையை அமைத்துள்ளனர். இந்த சிலையின் திறப்பு விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு வீர மரணம் அமைந்த மனேஷ்வர் பசுமதாரிக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதுகுறித்து அவரது மகன் தனஞ்சோய் பசுதாரி கூறுகையில்,'அரசு எங்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது. துணை ராணுவ படையை சேர்ந்த உயர் அதிகாரிகள் எங்களை அடிக்கடி சந்தித்து எங்களுக்கு தேவையான உதவிகளை செய்துள்ளோம். அடையாளப்படுத்துதலை தாண்டி நாங்களும் ஏதாவது செய்ய விரும்பினோம். இந்த சிலையை பார்க்கும்போது எனது தந்தை வீர மரணம் அடைந்த கதை நினைவுக்கு வரும்' என்று கூறினார்.
இந்த சிலை கிராமத்தில் உள்ள ஏராளமான இளைஞர்களை ராணுவப் பணியில் சேர்வதற்கு ஊக்கப்படுத்துவதாக அமையும் என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வீர மரணம் அடைந்த மனேஷ்வர் பசுமதாரியின் உறவினர் கமல் போரோ என்பவர் NDTVக்கு அளித்த பேட்டியில்,'அரசியல்வாதிகள் எங்களுக்கு உதவி செய்கிறார்களோ இல்லையோ, நாங்கள் நிதி சேகரித்து சிலையை நிறுவியுள்ளோம். இதுதான் வீரமரணம் அடைந்த பசுமதாரிக்கு நாங்கள் செய்யும் மரியாதையாக இருக்கும்' என்று தெரிவித்துள்ளார்.