இது காவல்துறை, பாதுகாப்புப் படையினர் மற்றும் அதிரடிப்படையினரின் கூட்டு செயல்பாடாகும்
Srinagar: நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்ட நடந்து கொண்டிருக்கக்கூடிய நிலையில், ஜம்மு-காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் 20 கிலோ வெடிபொருட்களுடன் (IED) கார் ஒன்றை பாதுகாப்புப்படையினர் கைப்பற்றியுள்ளனர். காரின் ஓட்டுநர் தப்பியோடிவிட்டார்.
“உளவுத்துறையின் தகவலையடுத்து கடந்த இரண்டு நாட்களாக ராணுவம், காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை வாகன சோதனையில் கார் ஒன்று நிற்காமல் சென்றதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் காரை விரட்டிச் சென்று துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஆனால், காரின் ஓட்டுநர் தப்பித்துவிட்டார்“ என போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் விஜய் குமார் தெரிவித்துள்ளார்.
காரில் இருந்து 20 கிலோ அளவிலான வெடிபொருட்கள் (IED) மீட்கப்பட்டது. இந்த அளவிலான வெடி பொருட்கள் ஒரு பெரிய தாக்குதலுக்கு போதுமானதாகும். மீட்கப்பட்ட வெடி பொருள் பத்திரமாக அழிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை ராணுவம், காவல்துறை மற்றும் துணை ராணுவப்படையினரால் மேற்கொள்ளப்பட்டது என குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இதேபோல ஒரு தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. பாகிஸ்தானை தளமாக கொண்டு செயல்படும் இந்த அமைப்பை எதிர்த்து இந்தியா விமானப்படை தாக்குதல்களை மேற்கொண்டது.
கடந்த இரண்டு மாதங்களில் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இந்த காலகட்டங்களில் 30 பாதுகாப்புப்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதே போல 38 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
மிக முக்கியமாக, காஷ்மீரின் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதக் குழுவின் தளபதியான ரியாஸ் நைக்கூ இந்த மாத தொடக்கத்தில் புல்வாமாவில் நடந்த மோதலின் போது கொல்லப்பட்டார். இந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து பயிற்சி பெற்று செயல்படுபவர்களாக உள்ளனர்.