கமரானை தவிர கஷி ரஷித் என்னும் தீவிரவாதியும் கொல்லப்பட்டார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
New Delhi: கடந்த வியாழன் அன்று, ஜம்மூ- காஷ்மீரின் புல்வாமாவில், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இன்று பாதுகாப்புப் படைக்கும் தீவிரவாதிகளுக்கும் நடந்த என்கவுன்ட்டரில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தளபதி கம்ரான் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கம்ரானைத் தவிர கஷி ரஷித் என்னும் தீவிரவாதியும் கொல்லப்பட்டார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையைச் சேர்ந்த நான்கு பேர் இந்த என்கவுன்ட்டரில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மூ காஷ்மிரில் கடந்த 12 மணி நேரமாக பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்று வறுகிறது.
சில நாட்களுக்கு முன்னர் புல்வாமா பகுதியில் நடந்த தாக்குதலுக்கு மிக அருகில்தான் நேற்றிரவு முதல் என்கவுன்ட்டர் நடந்து வருகிறது. முதலில் ராணுவத் தரப்பில் 4 பேரும், பொது மக்களைச் சேர்ந்த ஒருவரும் பலியாகினர் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது ஜெய்ஷ் அமைப்பின் முக்கியப் புள்ளிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
புல்வாமாவின் பிங்லான் பகுதியில், ஜெய்ஷ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பதுங்கியிருப்பதாக நேற்றிரவு பாதுகாப்புப் படைத் தரப்புக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்துதான், என்கவுன்ட்டர் வேட்டை நடந்துள்ளது என்று NDTV-க்கு நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வந்துள்ளது. சரியாக காலை 9 மணிக்கு பாதுகாப்புப் படை தரப்பிடமிருந்து அதிரடி தாக்குதல் ஆரம்பமாகியுள்ளது.
இந்த என்கவுன்ட்டரின் முக்கிய நோக்கம், கம்ரான்தான் எனப்படுகிறது. பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு கம்ரான்தான் மூளையாக செயல்பட்டவர் என்று நம்பப்படுகிறது.
கடந்த வியாழக் கிழமை, ஜம்மூ-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் 78 வாகனங்களில் சி.ஆர்.பி.எப் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது 22 வயது நிரம்பிய தீவிரவாதி ஒருவர், 60 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து கொண்ட கார் மூலம் வந்து, பாதுகாப்புப் படையினர் வந்த வாகனத்தில் மோதினார். இதனால், 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் படிக்க : “புல்வாமா தாக்குதலுக்கு என்ன காரணம்?”- ‘ரா' அமைப்பின் மாஜி தலைவர் அதிர்ச்சி தகவல்