புல்வாமா தீவிரவாத தாக்குதல்: பாரத் பந்த் காரணமாக கவுஹாத்தியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
New Delhi: கடந்த பிப்.14ம் தேதி நடந்த புல்வாமா தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தில் பலியான துணை ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று நாடு முழுவதும் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஏஐடி) வெளியிட்டுள்ள அறிக்கையில், புல்வாமா தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தில் பலியான துணை ராணுவ வீரர்களுக்கு ஆழந்த இரங்கல்களை தெரிவித்தனர். மேலும், பலியான ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, வணிகர்களின் கடையடைப்பு போராட்டம் நடைபெறம் என்றும் எந்த ஒரு வர்த்தக நடவடிக்கையும் இன்று எடுக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக வணிகர்கள் அவரவர் பகுதிகளீல் ஒரு நாள் உண்ணாவிரதமும், பேரணியும் மேற்கொள்வார்கள் என சிஏஐடி தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், மகராஷ்டிரா, தமிழ்நாடு, அசாம் மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்றும் இதில் பொதுபோக்குவரத்து மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் பந்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பலியான ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு உதவும் விதமாக வர்த்தகர்கள் நிதி திரட்டவும் முடிவு செய்துள்ளதாக சிஏஐடி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கும் சீனாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சீன பொருட்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற தேசிய பிரசாரத்தை முன்னெடுக்க உள்ளதாக சிஏஐடி கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பிரவீன் கந்தேல்வால் தெரிவித்துள்ளார்.
புல்வாமாவில் கடந்த 14ஆம் தேதி துணை ராணுவ வீரர்கள் சென்ற பேருந்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். ராணுவ வீரர்கள் மீதான இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமத் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கையில் மெழுகுவர்த்தி ஏந்தி நேற்று ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.