This Article is From Jul 02, 2020

குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவதே ஜெயராஜ் குடும்பத்துக்கு நாம் தரும் ஆறுதல்: உதயநிதி

ரிமாண்ட் செய்த மாஜிஸ்திரேட், சான்றளித்த மருத்துவர், சிறை அதிகாரி... அவர்களையும் விசாரித்து வழக்கில் சேர்க்க வேண்டும்.

குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவதே ஜெயராஜ் குடும்பத்துக்கு நாம் தரும் ஆறுதல்: உதயநிதி

குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவதே ஜெயராஜ் குடும்பத்துக்கு நாம் தரும் ஆறுதல்: உதயநிதி

குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவது மட்டுமே ஜெயராஜ் குடும்பத்துக்கு நாம் தரும் ஒரே ஆறுதல் என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் கடந்த  19-ம்தேதி, செல்போன்  கடை நடத்தி வரும் ஜெயராஜ் மற்றும் அவரது  மகன் பென்னிக்ஸ்  ஆகியோர் போலீசாரால் கைது  செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். படு காயங்களுடன் கோவில்பட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர்கள் ஜூன் 23-ம்தேதி உயிரிழந்தனர்.

காவல் நிலையத்தில் வைத்து இருவரும் போலீசாரால் சித்ரவதை செய்யப்பட்டதால் படுகாயம் அடைந்து இருவரும் உயிரிழந்திருக்கலாம் என குற்றச்சாட்டு எழுந்தது.  இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள். 

சிபிஐ இந்த வழக்கை விசாரிப்பதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. சிபிஐ வழக்கை எடுக்கும் முன்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில், விசாரணை மேற்கொண்டு வந்த சிபிசிஐடி போலீசார், நேற்று முதல் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட அனைத்து போலீசாரையும் கைது செய்துள்ளனர். இதில், 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தருவது மட்டுமே ஜெயராஜ் குடும்பத்துக்கு நாம் தரும் ஒரே ஆறுதல் என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் அவரது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலைவழக்கில் ஆதாரம், சாட்சியம் இருந்தும் சம்பந்தப்பட்ட கொலையாளிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் தாமாக முன்வந்து தலையிட வேண்டியுள்ளது, மாஜிஸ்திரேட் விசாரணை செய்ய வேண்டியுள்ளது, ஒட்டுமொத்த தமிழகமே போராட வேண்டியுள்ளது... என்பது கவலையளிக்கக்கூடிய விஷயம்.

அவர்களை தாக்கியதாக சொல்லப்படும் சேவா பாரதி இளைஞர்கள் (friends of police), ரிமாண்ட் செய்த மாஜிஸ்திரேட், சான்றளித்த மருத்துவர், சிறை அதிகாரி... அவர்களையும் விசாரித்து வழக்கில் சேர்க்க வேண்டும். முன்னாள் எஸ்பி, மாற்றப்பட்ட அதிகாரிகள் குமார், பிரதாபன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

‘சாத்தான்குளம் போலீசாரால் இப்படி பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்ற புகார்களை கருத்தில்கொண்டு, அக்காவல்நிலையம் கையாண்ட சமீபத்திய வழக்குகளை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தருவதே ஜெயராஜ் குடும்பத்துக்கு நாம் தரும் ஒரே ஆறுதல் என்று அவர் தெரிவத்துள்ளார். 

.