ரயில் வருவதை மக்கள் கூட்டம் அறிந்திருக்கவில்லை
New Delhi: பஞ்சாபின் அமிர்தசரஸில் நேற்றிரவு தசரா பண்டிகை கொண்டாடத்தின் போது, எதிர்பாராத விதமாக கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த மக்கள் மீது ரயில் பாய்ந்தது. இந்த விபத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. ரயில்வே தண்டவாளத்திலிருந்து 100 மீட்டர் தொலைவிலேயே ராவணனின் உருவ பொம்மை எரிக்கப்பட்டுள்ளது. உருவ பொம்மை எரிப்பின் போது, பட்டாசுக்களும் கொளுத்தப்பட்டது. இந்த சத்தம், ரயில் சைரனின் சத்தத்தை கேட்காமல் செய்து விட்டதாக தெரிகிறது.
‘சரியாக ராவணனின் உருவ பொம்மை எரிக்கப்பட்ட போது, மக்கள் ரயில் தண்டவாளம் நோக்கி ஓட ஆரம்பித்தனர். எரிந்து கொண்டிருக்கும் உருவ பொம்மை மேலே விழுந்து விடும் என்று பயந்த மக்கள் அப்படி செய்தனர். ஆனால், அந்த நேரத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த ரயில் மக்கள் மீது பாய்ந்துவிட்டது' என்று கூறியுள்ளார் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர்.
ரயில் சம்பவ இடத்தைக் கடக்க கிட்டத்தட்ட 10 முதல் 15 நொடிகள் எடுத்தது. அதன் பிறகு தண்டவாளத்தின் பல இடங்களில் துண்டு துண்டாக மனித உடல்கள் சிதறிக் கிடந்துள்ளது. இது குறித்து சமூக வலைதளங்களில் பல வீடியோ பதிவுகள் வெளியிடப்பட்டன.
‘ரயில் எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை. திடீரென்று மக்கள் கூட்டத்தின் மீது பாய்ந்தது. எதையும் உணர்வதற்கு முன்னர் அங்கிருந்து ரயில் புறப்பட்டு விட்டது' என்று கூறுகிறார் சம்பவத்தை நேரில் பார்த்த இன்னொருவர்.
விபத்து நடந்து பல மணி நேரம் கடந்த பின்னரும், பலரின் உடல்கள் இன்னும் ரயில் தண்டவாளத்திற்கு அருகில் சிதறிக் கிடக்கிறது. அரசு நிர்வாகம் உடல்களை உடனடியாக அப்புறப்படுத்த முடியாது என்று சொல்லி இருப்பதால், கொண்டாட்டத்துக்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கோபத்துடன் சம்பவ இடத்திலேயே காத்துக் கிடக்கின்றனர்.
ரயிலை இயக்கி வந்த ஓட்டுநர், அடுத்த ரயில் நிலைய அதிகாரியிடம் விபத்து குறித்து உடனடியாக தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து விசாரித்து வரும் அதிகாரிகள், ரயில் ஓட்டுநரின் கருத்தும் கேட்டறியப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்ததை அடுத்து, ஃபதன்கோட் பகுதியில் ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.