This Article is From Aug 20, 2020

பஞ்சாபில் அதிகரிக்கும் கொரோனா; புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வருகிறது!

இன்று மாலை அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட வேண்டும் என்றும், பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அரசாங்க அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,693 பேர் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Chandigarh:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 28 லட்சத்தினை கடந்துள்ள நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் இரவு 7 மணி முதல் காலை 5 மணிவரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 167 நகரங்களுக்கு இந்த ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், இந்த நடைமுறை ஆகஸ்ட் 31 வரை அமலில் இருக்கும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த அவசர நடவடிக்கைகளில், பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு தடை (திருமணங்கள் மற்றும் இறுதி சடங்குகள் தவிர), அத்தியாவசியமற்ற பொருட்களை விற்கும் கடைகளில் 50 சதவீதத்தை மூடுவது ஆகியவை அடங்கும் என மாநில அரசு குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை முதலமைச்சர் அமரீந்தர் சிங் வெளியிட்டுள்ளார். மேலும், கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த போர் முனைகளில் செயல்படுவதைப்போல செயல்பட வேண்டும் என்றும், மாநிலத்தின் பொருளாதாரத்தை பாதிக்காமல் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், அமரீந்தர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை மாநிலம் முழுவதும் 900க்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புக்கள் தன்னை வேதனைப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இனி வரும் நாட்களில் பாதிப்பு அதிக அளவில் இருக்கும் என்றும், இதனால் சுகாதார நிலைமையில் கடுமையான நடவடிக்கைகள் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக அரசியல் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ள அமரீந்தர், தனது சொந்த கட்சியான காங்கிரஸை தடையை கண்டிப்பாக சுயமாக செயல்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

இன்று மாலை அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட வேண்டும் என்றும், பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அரசாங்க அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

பேருந்துகள் மற்றும் பொது போக்குவரத்து 50 சதவிகித எண்ணிக்கையிலும், தனியார் கார்கள் ஒரு வாகனத்திற்கு மூன்று பயணிகள் என்கிற எண்ணிக்கையிலும் இயக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் 36,000க்கும் அதிகமானவர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 12,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,693 பேர் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 24 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.