This Article is From Jul 06, 2019

''காங்கிரஸ் தலைவராக இளைஞரை தேர்வு செய்ய வேண்டும்'' - கட்சிக்குள் வெடித்த மோதல்!!

ராகுல் காந்தி இருந்த இடத்தில் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அல்லது மல்லிகார்ஜுன கார்கே நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

''காங்கிரஸ் தலைவராக இளைஞரை தேர்வு செய்ய வேண்டும்'' - கட்சிக்குள் வெடித்த மோதல்!!

ராஜினாமா செய்வதில் விடாப்பிடியாக உள்ளார் ராகுல் காந்தி.

New Delhi:

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக இளைஞர் ஒருவதைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று பஞ்சாப் மாநில முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அமரிந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார். 

பதவியை ராஜினாமா செய்வதில் மாற்றம் இல்லை என்று ராகுல் காந்தி விடாப்பிடியாக இருந்து வரும் நிலையில், மாற்று தலைவரை தேர்வு செய்யுங்கள் என்று கூறி ராகுல் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 2 பேரில் ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் பரவின.

சுஷில் குமார் ஷிண்டே அல்லது மல்லிகார்ஜுன கார்கேவுக்குத்தான் அடுத்த காங்கிரஸ் தலைவராக ஆகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இதன் மூலம் நரசிம்ம ராவ், சீதாராம் கேசரிக்கு பின்னர் நேரு-காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சியை வழி நடத்திச் செல்லும் நிலை உருவாகி உள்ளது. தலைவரை இறுதி செய்வதில் சோனியா காந்தி, ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோர் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

77 வயதாகும் சுஷில் குமார் ஷிண்டே மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வராகவும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். கார்கேவை விட ஷிண்டேவுக்குத்தான் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கட்சியின் தலித் முகமாகவும் சுஷில் குமார் பார்க்கப்படுகிறார். 

76 வயதாகும் மல்லிகார்ஜுன கார்கே சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தோல்வியை தழுவினார். காங்கிரஸ் ஆட்சியின்போது மத்திய அமைச்சராக கார்கே பலமுறை பொறுப்பு வகித்திருக்கிறார். 

இந்த நிலையில் இளைஞர் ஒருவரைத்தான் கட்சி தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்று பஞ்சாப் மாநில முதல்வரும் கட்சியின் மூத்த தலைவருமான அமரிந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ' காங்கிரஸ் கட்சிக்கு இளைஞர் ஒருவர்தான் தலைவராக வேண்டும். அதுதான் தற்போதைய தேவையாக உள்ளது. ராகுலின் ராஜினாமா அறிவித்து துரதிருஷ்டவசமானது. அவரது இடத்தில் மக்களை ஈர்க்கக் கூடிய ஒருவர்தான் தலைவராக தேர்வு செய்ய வேண்டும். அவர் அடிமட்ட தொண்டர்களும், மக்களும் அணுகக் கூடியவராக இருக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். 

மூத்தவர்கள் 2 பேர் தலைவர் பொறுப்புக்கு பேசப்பட்டு வரும்  நிலையில், இளைஞரை தலைவராக்க வேண்டும் என்ற எதிர்க்குரலும் காங்கிரசுக்குள் எழுகிறது. 

.