அமிர்தசரஸ் குண்டுவெடிப்பு குறித்து பத்திரிகையாளர்களுக்கு விளக்கம் அளித்த பஞ்சாப் முதல்வர்.
Chandigarh: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்த வெடிகுண்டு தாக்குதலின் பாகிஸ்தானின் சதிச் செயலே காரணம் என்று பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் கடந்த ஞாயிறன்று மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அமிர்தசரஸில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வழிபாட்டுத் தலம் அருகே இந்த தாக்குதல் நடந்தது.
இதில் 3 பேர் உயிரிழந்தனர். 20 பேருக்கு காயம் ஏற்பட்டது. பஞ்சாப் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக அம்மாநில முதல்வர் அமரிந்தர் சிங் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்த வெடிகுண்டு தாக்குதலில் வகுப்புவாத மோதல்கள் ஏதும் இல்லை. இது முழுக்க முழுக்க தீவிரவாத தாக்குதல்தான். பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புதான் இந்த வேலைகளை செய்திருக்கிறது. எளிதாக தாக்க முடியும் என்பதால் அப்பாவிகளை குறி வைத்து இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, காலிஸ்தான் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்க கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இதுதொடர்பாக சீக்கிய அமைப்புகளை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.