This Article is From May 04, 2020

“இது இந்திய அரசுக்கு மிகப் பெரிய அவமானம்!”- சோனியா காந்தியின் முடிவும் சிதம்பரத்தின் விமர்சனமும்

"காங்கிரஸ் கட்சியானது ஒவ்வொரு ஏழை தொழிலாளி மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளியின் ரயில் பயணத்திற்கான செலவை ஏற்க முடிவு செய்துள்ளது"

Advertisement
இந்தியா Written by

'ஊரடங்கை அமல்படுத்துவதற்கு நான்கு மணி நேரம் முன்னதாகத்தான் அது குறித்து மத்திய அரசு, மக்களுக்கு அறிவித்தது'

Highlights

  • புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றி ஆதங்கப்பட்டுள்ளார் சிதம்பரம்
  • கொரோனா ஊரடங்கால் புலம் பெயர் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்
  • பலர் நடந்தே சொந்த ஊர்களுக்குப் பயணப்பட்டு வருகிறார்கள்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் வேலையின்றி தவிக்கும் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பி செல்ல ரயில் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பி செல்வதற்காகும், ரயில் கட்டணத்தை காங்கிரஸ் கட்சி ஏற்கும் என்று அவர் அதிரடியாக தெரிவித்துள்ளார். 

சோனியா காந்தியின் இந்த முடிவு குறித்து, முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியுமான ப.சிதம்பரம், “புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்வதற்கான கட்டணத் தொகையை அந்தந்த மாநில (பிரதேச) காங்கிரஸ் கட்சிகளே ஏற்கும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாகும். இதனால் இந்திய அரசுக்கு மிகப் பெரிய அவமானம் ஏற்பட்டுள்ளது.

தமிழக பிரதேச காங்கிரஸ், தமிழக முதல்வரிடம் 1 கோடி ரூபாய் நிதியுதவி கொடுக்க உள்ளதாக முடிவெடுத்துள்ளது. இது புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பயணத்துக்காக மட்டும் என்றும் கூறியுள்ளது. நாட்டிலேயே முதல் பிரதேச காங்கிரஸ் கமிட்டியாக இந்த முடிவை எடுத்தமைக்குப் பாராட்டுகள்,” என ட்விட்டர் மூலம் கூறியுள்ளார். 

Advertisement

இன்று காலை சோனியா காந்தி எழுதியுள்ள கடிதத்தில், “குடிமக்களுக்கான சேவையில், ஒற்றுமையுடனும், அவர்களுடன் தோளோடு தோள் நிற்கவும் இந்திய தேசிய காங்கிரஸின் தாழ்மையான பங்களிப்பாகும். 

நமது தொழிலாளர்களே நாட்டின் வளர்ச்சியின் தூதர்கள் ஆவார்கள். வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் நமது குடிமக்களுக்கு இலவச விமானப் பயணத்தை ஏற்பாடு செய்து அதன் பொறுப்பை அங்கீகரித்த மத்திய அரசு, அதற்கான போக்குவரத்து மற்றும் உணவுக்காக ரூ.100 கோடி வரை செலவழித்தது. பிரதமரின் கொரோனா நிதிக்கு ரூ.151 கோடி ரயில்வே அமைச்சகம் அளிக்கிறது. இவையெல்லாம் செய்ய முடிந்த அரசுக்கு, இது போன்ற கடும் துயரமான நேரத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச ரயில் பயணத்தை ஏன் அளிக்க முடியவில்லை?

Advertisement

ஊரடங்கை அமல்படுத்துவதற்கு நான்கு மணி நேரம் முன்னதாகத்தான் அது குறித்து மத்திய அரசு, மக்களுக்கு அறிவித்தது. அதனால், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்லும் வாய்ப்பை இழந்தனர். 

1947 ஆம் ஆண்டில் பிரிவினையின்போது, இந்தியா இதுபோன்ற துயர்மிகுந்த காலத்தை சந்தித்தது. தங்களது குடும்பத்தினருடன் ஒன்றாக இருக்க விரும்பிய ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் போக்குவரத்து வசதிகள் இல்லாமல், பணம் இல்லாமல், உணவு இல்லாமல், அவர்களது சொந்த ஊர்களுக்கு பல நூறு கிலோ மீட்டர்கள் நடந்தே செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டனர். 

Advertisement

ஆனால், இன்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும், புலம்பெயர் தொழிலாளர்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவித்து வருகின்றனர். தங்களது குடும்பத்தினருடன் இருக்க சொந்த ஊர் செல்ல விரும்புகின்றனர். ஆனால் அவர்களிடம் பணம் இல்லை, அவர்களுக்கு இலவச போக்குவரத்தும் இல்லை. 

நெருக்கடியான இந்த நேரத்தில் மத்திய அரசும் ரயில்வே அமைச்சகமும் ரயில் டிக்கெட்டுகளுக்கு கட்டணம் வசூலிப்பது என்பது பெரும் கவலைக்குரியது. காங்கிரஸின் கோரிக்கைகளை மத்திய அரசும், ரயில்வே அமைச்சகமும் முற்றிலும் புறக்கணித்து வருகிறது. 

Advertisement

அதனால், காங்கிரஸ் கட்சியானது ஒவ்வொரு ஏழை தொழிலாளி மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளியின் ரயில் பயணத்திற்கான செலவை ஏற்க முடிவு செய்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவித்த புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களது மாநிலங்களுக்கு கொண்டு சேர்க்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. தொடர்ந்து, அதன்மூலம், ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களது மாநிலங்களுக்கு திரும்பிவருகின்றனர்.

இந்நிலையில், 40 நாள்களுக்கும் மேலாக வேலையில்லாததால் உரிய உணவின்றி தவித்த ஏழை புலம்பெயர் தொழிலாளர்களை இலவசமாக பயணிக்க அனுமதிக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி மறுத்தது. சிறப்பு ரயிலில் பயணிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழக்கமாக உள்ள கட்டணத்தை விட கூடுதலாக 50 ரூபாய் வசூலிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Advertisement