This Article is From Jun 09, 2018

சர்வதேச அளவில் கல்வி நிறுவனங்களில் பெஸ்ட் எது? இந்தியாவின் பெஸ்ட் எது?

சர்வதேச அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களை ஒவ்வொரு ஆண்டும் குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் அல்லது க்யூ.எஸ் என்று அமைப்பு பட்டியலிட்டு வருகிறது

சர்வதேச அளவில் கல்வி நிறுவனங்களில் பெஸ்ட் எது? இந்தியாவின் பெஸ்ட் எது?

ஹைலைட்ஸ்

  • இந்தப் பட்டியலுக்காக 85 நாடுகளின் கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன
  • இந்திய அளவில் ஐஐடி மும்பை தான் அதிக புள்ளி பெற்றுள்ளது
  • அமெரிக்காவின், எம்.ஐ.டி தான் முதல் இடத்தைப் பிடித்துள்ளது
New Delhi:

சர்வதேச அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களை ஒவ்வொரு ஆண்டும் குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் அல்லது க்யூ.எஸ் என்று அமைப்பு பட்டியலிட்டு வருகிறது. 85 நாடுகளில் இருக்கும் கல்வி நிறுவனங்களை இந்தத் தேர்வுக்கு எடுத்துக் கொள்ளும் க்யூ.எஸ். அதில் சிறந்த 1000 கல்வி நிறுவனங்களின் பட்டியலை மட்டும் பல்வேறு காரணிகளைக் கொண்டு அளந்து வெளியிடும். உலக அளவில் பல கல்வி நிறுவனங்கள் சேர்ந்து அங்கீகரித்த ஒரு அமைப்பு என்பதால், க்யூ.எஸ்-ன் தர வரிசைப் பட்டியல் பெரிதும் மதிக்கப்படும் ஒன்றாகும். இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டது. 

இந்த ஆண்டும் பல இந்திய கல்வி நிறுவனங்கள் டாப் 500 பட்டியலுக்குள் இடம் பிடித்துள்ளன. இதில் மும்பையில் இருக்கும் ஐஐடி பாம்பே தான் அதிகபட்ச புள்ளிகள் பெற்று 162 வது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற ஆண்டும் ஐஐடி பாம்பே தான் இந்தியாவில் அதிக புள்ளிகள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டு 179 வது இடத்தைப் பிடித்தது. ஆனால், இந்த முறை 17 இடங்கள் முன்னேறி 162 வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. குறிப்பாக, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஐஐடி பாம்பே மிகப் பெரிய அளவில் இந்தப் பட்டியலில் முன்னேறி வருகிறது. இந்த 5 வருடங்களில் 71 இடங்கள் முன்னிலைப் பெற்றுள்ளது ஐஐடி பாம்பே. 

அமெரிக்காவைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களும் கல்வி நிறுவனங்களும் தான் இந்தப் பட்டியலின் டாப் இடங்களை ஆக்கிரமித்து உள்ளன. அமெரிக்காவின் எம்.ஐ.டி இருப்பதிலேயே அதிக புள்ளிகள் பெற்று முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதற்கடுத்து ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம், ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா இன்ஸ்டிட்டியூட் ஆகியவரை இரண்டு, மூன்று மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்துள்ளன. எம்.ஐ.டி, தொடர்ந்து 7 வது ஆண்டாக முதல் இடத்தைத் தக்க வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இதுவரை எந்த கல்வி நிறுவனங்களும் செய்யாத சாதனை இது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவைப் பொறுத்தவரை, ஐ.ஐ.எஸ்.சி 170- வது இடத்தையும், ஐஐடி டெல்லி 172 வது இடத்தையும், ஐஐடி மெட்ராஸ் 264 வது இடத்தையும் பிடித்துள்ளன. ஆசியாவைப் பொறுத்தமட்டில், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் 11-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கடுத்து, சிங்கப்பூரின் நான்யாங் டெக்னலாஜிக்கல் பல்கலைக்கழகம் 12-வது இடத்தையும், சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகம் 17- வது இடத்தையும் பிடித்துள்ளன. 

தொடர்ந்து கல்வி நிறுவனங்கள் தர வரிசையில் முன்னேறி வரும் ஐஐடி பாம்பே குறித்து அதன் இயக்குநர் பேராசிரியர் தேவாங் காக்கார், `கல்வி மற்றும் ஆராய்ச்சியில் எங்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிறந்து விளங்க அயராது பாடுபட்டு வருகின்றனர். எங்கள் பரந்துப்பட்ட செயல்பாடுகளால் தான் உலக அளவில் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் தொடர்ந்து முன்னேறி வருகின்றோம்' என்றுள்ளார் பெருமையுடன். 

.