This Article is From Jul 21, 2018

'பாஜகவின் பினாமியாக உள்ளது தமிழக அரசு'- அதிமுகவை வறுத்தெடுத்த ஸ்டாலின்

நேற்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கான வாக்கெடுப்பில், மத்திய அரசு அமோக வெற்றி பெற்றது

Advertisement
தெற்கு
Chennai:

நேற்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கான வாக்கெடுப்பில், மத்திய அரசு அமோக வெற்றி பெற்றது. இந்த வாக்கெடுப்பில் அதிமுக-வைச் சேர்ந்த எம்.பி-க்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த நடவடிக்கையை தமிழக எதிர்கட்சித் தலைவரும் திமுக-வின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு ஒரு நாள் முன்னர் ஸ்டாலின், ‘பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்திருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்ற ஜனநாயகத்திலும், இந்துத்துவாவின் பிளவுபடுத்தும் பிற்போக்கு அரசியலுக்கும் எதிரான எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையிலும், ஒற்றைச் செயல் திட்டத்தை நிறைவேற்றிடும் நோக்கத்திலும் ஆக்கபூர்வமான திருப்புமுனையாக அமையும் என்று நாடெங்கிலும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த உணர்வுகளை அவமதித்து, தமிழ்நாடு சட்டமன்றத்தின் தீர்மானங்களைத் தூக்கியெறிந்து, மாநிலத்தின் உரிமைகளை எல்லாம் அடாவடியாகப் பறித்துக் கொண்டிருக்கும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை மக்களவையில் அ.தி.மு.க ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று அறிக்கை வெளியிட்டார். 

ஆனால் அதிமுக, பாஜக-வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது. இதையடுத்து, அறிக்கை மூலம் அதிமுக-வின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.

Advertisement

‘தமிழ்நாட்டின் நலன்களை ஒட்டு மொத்தமாகப் புறக்கணித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்காமல், தமிழக மக்களுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்திருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தைப் பொறுத்தவரை மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான அ.தி.மு.க முழுக்க முழுக்க பா.ஜ.க.வின் பினாமி கம்பெனியாகச் செயல்படுகிறது என்பது தற்போது நூற்றுக்கு நூறு சதவீதம் நிரூபிக்கப்பட்டுள்ளது. “எங்களுக்குள் அரசு ரீதியான உறவு மட்டுமே இருக்கிறது” என்று இதுவரை வாய் கிழியப் பேசி வந்த அ.தி.மு.க- பா.ஜ.க.வினரின் முகமூடி இப்போது கிழிந்து தொங்குகிறது. கண்ணை மூடிக்கொண்டு மத்திய பா.ஜ.க. அரசை ஆதரித்ததன் மூலம் “பா.ஜ.க – அ.தி.மு.க” இடையே உள்ள மர்மக்கூட்டணியும் அம்பலமாகி விட்டது’ என்று கொதித்துள்ளார் ஸ்டாலின்

Advertisement

மேலும் சமீபத்தில் தமிழகத்தில் நடந்த ஐடி ரெய்டு குறித்து ஸ்டாலின், ‘2016- ஆம் ஆண்டு முதல் அ.தி.மு.க அமைச்சர்கள், அ.தி.மு.க அரசில் உள்ள தலைமைச் செயலாளர், துணை வேந்தர், மற்றும் அமைச்சர்களுக்கு வேண்டியவர்கள் மீது நடத்திய வருமான வரித்துறை சோதனைகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு, திடீரென்று நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பிற்கு நான்கு நாட்களுக்கு முன்பு முதலமைச்சருடைய சம்பந்தியின் பார்ட்னரின் நிறுவனங்களில் வருமான வரித்துறையை ஏவி சோதனை செய்த உள்நோக்கம் பா.ஜ.க.விற்கு நிறைவேறி விட்டது. ஆகவே, அ.தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை வளைத்துப் போடுவதற்கு பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு எடுத்த “பிரத்யேக முயற்சி” தான் இந்த வருமான வரித்துறை ரெய்டே தவிர ஊழலை ஒழிக்கும் நடவடிக்கை அல்ல என்பது அப்பட்டமாகத் தெரிகிறது’ என்று பாஜக-வையும் விமர்சித்துள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு, 325 - 126 என்ற வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

அதே நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திராவின் பிரச்னைக்காக இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளது. சென்ற முறை நடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அதிமுக சார்பில் சபை முடக்கப்பட்ட போது, யார் நமக்கு ஆதரவுக்கரம் நீட்டனர். காவிரி டெல்டா விவசாயிகள் பிரச்னைக்காக யார் நமக்காக குரல் கொடுத்தனர். இப்போது அவர்கள் மாநிலத்துக்கு ஒரு பிரச்னை வந்துள்ளது’ என்று சூசகமாக பதில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement