ரஃபேல் வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, உண்மைக்கு ஒரு பக்கமே, பொய்க்கு பல பக்கம் உண்டு என அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
New Delhi: ரஃபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கும், நீதிமன்றம் தலையிடுவதற்கும் எந்தவிதமான முறைகேடும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதலில் விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், வழக்கு தொடர்பான மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. எனினும் காங்கிரஸ் கட்சியினர் ரஃபேல் ஒப்பந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, காது கேட்காதவர்களுக்கு ஒரு போதும் பதில் கேட்காது என நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது, ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது. ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் பற்றி பொய் பிரச்சாரம் செய்தவர்கள் மதிப்பை இழந்துள்ளனர் என அருண் ஜெட்லி தெரிவித்தார்.
ரஃபேல் விவகாரம் தொடர்பாக அரசு அளித்த அனைத்து தகவல்களும் உண்மை என்றும், ராகுல் அளித்த அனைத்து தகவல்களும் பொய் என்பது தற்போது தெரிய வந்துள்ளது என்றார். உண்மைக்கு ஒரு பக்கமே, பொய்க்கு பல பக்கம் உண்டு, அதனால் தான் ராகுல் பல விவரங்களை காட்டி வந்தார் என அருண் ஜெட்லி தெரிவித்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் ரஃபேல் விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ரஃபேல் போர் விமானங்களை மத்திய அரசு கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் எந்தவிதமான சந்தேகமும் நீதிமன்றத்துக்கு இல்லை. ரபேல் போர் விமான கொள்முதல் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு விசாரணை நடத்த எந்த முகாந்திரமும் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.