சென்னையில் இன்று ரபேல் ஒப்பந்தம் குறித்த ‘நாட்டை உலுக்கும் ரபேல் ஊழல்' என்ற புத்தகத்தை வெளியிடயிருந்த நிலையில், புத்தகம் வெளியிடல்நிகழ்விற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மேலும் புத்தகத்தை வெளியிடும் பாரதி புத்தாகாலயத்தில் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து புத்தகங்களையும் பறிமுதல் செய்துள்ளது.
இந்தப் புத்தகம் வெளியீட்டில் பத்திரிகையாளர் என்.ராம், இயக்குநர் ராஜுமுருகன், எழுத்தாளர் ஜெயராணி ஆகியோர் பங்கேற்க இருந்தனர். இப்படிப்பட்ட சூழலில்தான் நிகழ்ச்சிக்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இது குறித்து மூத்த பத்திரிகையாளர் குமரேசனிடம் பேசிய போது, “இந்தப் புத்தகத்தை வெளியிட வெவ்வேறு அரங்கங்களை முன்பதிவு செய்திருந்தோம்.ஆனால், அரசியல் ரீதியான புத்தகம் என்பதாலும் நெருக்கடி கொடுக்கப்பட்டு அரங்கம் கொடுக்க மறுக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் செயற்பொறியாளர் கொடுத்த கடித்தத்தில் ‘வெளியிடப்படும் புத்தகம் அரசியல் ரீதியானது.
இது தேர்தல் விதிமுறையை மீறும் செயலாகும். எச்சரிக்கையையும் மீறி நிகழ்ச்சி நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கடிதம் ஒன்று வந்தது. இதையடுத்து வந்த தேர்தல் பறங்கும் படையின் காவலர்கள், வெளியிட இருந்தபுத்தகங்களை கையகப்படுத்தினர். ரபேல் ஊழல் குறித்து பத்திரிகையில் தலையங்கம் எழுதப்படுகிறது. ஊடகங்களில் விவாத நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.மக்கள் பேசுகிறார்கள். அப்படியென்றால் அவையெல்லாம் விதிமீறலா…? இந்தப் புத்தகம் ரபேல் ஒப்பந்தம் குறித்து பத்திரிகைகளில் வெளியானகட்டுரைகளின் தொகுப்புதான். இதை தடை செய்ய காரணம் என்ன…? பொது மக்கள் பலரும் தேர்தல் ஆணையம் ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிகழ்வு இதை உறுதிப்படுத்துகிறது” என்று ஆதங்கப்பட்டார்
எழுத்தாளர் ஜெயராணியிடம் இது குறித்து பேசிய போது, “தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. ஆளும் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. தேர்தல் விதிமீறலை தேர்தல் ஆணையமே செய்கிறது.
இது குறித்து பத்திரிகையாளர் ஹிந்து என்.ராம் பேசிய போது இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது. சில 500 பிரதிகளை அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். ஆனால் சமூக ஊடகங்களில் இதன் பிரதி வைரலாகியுள்ளது". எனத் தெரிவித்தார்.
"தலைமை தேர்தல ஆணையம் எந்த சட்டத்தின் கீழ் கூட்டத்தை தடை செய்தததோடு புத்தகத்தையும் பறிமுதல் செய்தது எனத் தெரியவில்லை. பதிப்பாளர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தை அணுக வேண்டும்." எனக் கூறினார்.
மோடியின் பயோபிக் வெளிவர எந்தவொரு தடையும் இல்லாத போது ரபேல் பேர ஊழல் குறித்த புத்தகத்திற்கு மட்டும் தடை விதித்தது தேர்தல் ஆணையம் ஆளும் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயல்படுவதையேக் காட்டுகிறது” எனக் கண்டனத்தைப் பதிவு செய்தார்.