ரஃபேல் விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டி சென்ற ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது.
New Delhi: ரஃபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கு மற்றும் ராகுல் காந்தி மீதிருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒரே நாளில் விசாரணைக்கு வரும் என்று உச்ச நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தது. இந்நிலையில் ராகுல் வழக்கு ஒரு நாளிலும், ரஃபேல் வழக்கு இன்னொரு நாளிலும் விசாரணைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
ரஃபேல் விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டி சென்ற ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. இது குறித்து விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், ‘ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணை நடத்த தேவையில்லை' என்று கூறிவிட்டது. ஆனால், ஊடகங்களில் ராணுவத் துறையின் சில ரகசிய ஆவணங்கள் கசிந்து, மீண்டும் ரஃபேல் குறித்த விசாரணைக்கு வித்திட்டது.
இன்னொரு வழக்கு, ராகுல் காந்தி, ‘உச்ச நீதிமன்றமே சவுகிதார் திருடன் என்பதை ஒப்புக் கொண்டு விட்டது' என்று தவறுதலாக கூறிவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த இரு வழக்குகளும் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிமன்ற அமர்வுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை செய்த நீதிமன்றம், திங்கட்கிழமை (மே 6 ஆம் தேதி) இரு வழக்குகளும் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்ற உத்தரவிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட ஆணையில், ரஃபேல் தொடர்பான வழக்கு திங்கட்கிழமையும், ராகுல் வழக்கு மே 10 ஆம் தேதியும் விசாரணைக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து நீதிமன்ற அமர்வு, இரு வழக்குகளையும் மே 10 ஆம் தேதி விசாரிக்கிறோம் என்று உத்தரவிட்டுள்ளது.
பொறுப்புத் துறப்பு: ரஃபேல் ஒப்பந்தம் குறித்து NDTV செய்தி வெளியிட்டு வருவதால், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் 10,000 கோடி ரூபாய் கோரிஅவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளது.