ரஃபேல் விவகாரம் குறித்த சர்ச்சைகளுக்கு டஸால்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி விளக்கம் அளித்திருக்கிறார்.
Istres-Le Tube Air Base, Marseille: விமானப்படைக்கு பிரான்ஸிடம் இருந்து போர் விமானங்களை வாங்குவதற்கு கடந்த 2016-ல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி ரூ. 58 ஆயிரம் கோடிக்கு 36 ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குகிறது. விமானங்களை பிரான்சின் டஸால்ட் நிறுவனம் தயாரித்து வழங்கும்.
இந்த விவகாரத்தில் இந்தியாவின் கூட்டாளியாக ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்கல் லிமிடெட்டை (எச்.ஏ.எல்.) பரிந்துரை செய்யாமல் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்தை மத்திய அரசு பரிந்துரை செய்ததாக புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக பிரான்சின் முன்னாள் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலந்தே அளித்த பேட்டியில், பிரதமர் மோடியை திருடன் என்று கூறியிருந்தார். இதனை வலுவாக பிடித்துக் கொண்ட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மோடியை கடுமையாக விமர்சித்து வருகின்றன. ரஃபேல் விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டால் பிரதமர் மோடி சிக்குவார் என ராகுல் காந்தி கூறி வருகிறார்.
தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த பிரச்னையில் திடீர் திருப்பமாக டஸால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எரிக் ட்ராப்பியர் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது-
ரஃபேல் விமானத்தை தயாரிப்பதில் இந்தியாவின் கூட்டாளியாக ரிலையன்ஸ் நிறுவனத்தை நாங்கள்தான் தேர்வு செய்தோம். எங்களுக்கு ரிலையன்ஸை தவிர்த்து தொழில் ரீதியாக 30 பார்ட்னர்கள் உள்ளனர்.
முதலில் 126 விமானங்களை வாங்குவதாக பேசப்பட்டது. ஆனால் இந்திய அரசை பொறுத்தவரையில் இந்த எண்ணிக்கை சற்று கடினமாக பார்க்கப்பட்டது. அவர்கள் 36 விமானங்களை உடனடியாக கேட்டனர். இவ்வாறு எரிக் ட்ராப்பியர் கூறியுள்ளார்.