This Article is From Aug 29, 2018

ரஃபேல் ஒப்பந்தம்: ஜெட்லிக்கு ’24 மணி நேர சேலஞ்ச்’ வைத்த ராகுல்!

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கு இந்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது

ரஃபேல் ஒப்பந்தம்: ஜெட்லிக்கு ’24 மணி நேர சேலஞ்ச்’ வைத்த ராகுல்!
New Delhi:

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாஜக-வுக்கும் காங்கிரஸுக்கும் இடையில் தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்த ஒப்பந்தத்தில் மோடி தலைமையிலான மத்திய அரசு, முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தனது முகநூலில் காங்கிரஸுக்கு ரஃபேல் ஒப்பந்தம் குறித்து அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பினார். அதற்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கு இந்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில், விமானத்துக்கு அதிக பணம் கொடுத்து வாங்கப்படுவதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

‘ராகுல் காந்தி ரஃபேல் ஒப்பந்தத்தை, மழலைப் பள்ளியில் நடக்கும் ஒரு விவாதத்தைக் கையாள்வது போல கையாள்கிறார். இதை வைத்தே ரஃபேல் ஒப்பந்தத்தில் அவருக்கு இருக்கும் அறியாமை புரிகிறது. இது குறித்து காங்கிரஸ் கூறும் ஒவ்வொரு கருத்தும் அடிப்படையிலேயே தவறானது’ என்றுள்ளார் ஜெட்லி.

இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘ரஃபேல் கொல்லைக்கு தேசத்தின் கவனத்தை மீண்டும் திருப்பியதற்கு மிகவும் நன்றி ஜெட்லி. ரஃபேல் ஒப்பந்தம் குறித்து இருக்கும் சந்தேகங்களை போக்கிக் கொள்ள நாடாளுமன்ற குழு ஒன்றை அமைத்து விசாரிக்கலாமா? உங்களது உச்சபட்ச தலைவர் அவரது நண்பரை இந்த ஒப்பந்தம் மூலம் காக்க முயல்கிறார். இது குறித்து நன்கு ஆலோசித்து 24 மணி நேரத்தில் பதில் கூறுங்கள். நாங்கள் காத்திருக்கிறோம்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

ராகுலின் வாதத்துக்கு ஜெட்லி இன்னும் எந்த பதிலும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

.