This Article is From Oct 09, 2019

முதல் ரஃபேல் போர் விமானத்தை இந்தியாவிடம் ஒப்படைத்தது பிரான்ஸ்!! ராஜ்நாத் பெற்றுக்கொண்டார்!

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் நாட்டிற்கு 3 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின்போது ரஃபேல் போர் விமானங்களை பெறுவது தொடர்பாகவும், இரு தரப்பு உறவுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

ரஃபேல் போர் விமானத்தில் ராஜ்நாத் பறப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bordeaux:

இந்தியாவுக்கான முதல் ரஃபேல் போர் விமானத்தை பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் இன்று அளித்தது. இதனை பிரான்ஸ் சென்றுள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக் கொண்டார். 

இதையொட்டி இந்திய பாரம்பரியம் மிக்க சிறப்பு பூஜைகள் ரஃபேல் விமானத்திற்கு நடத்தப்பட்டன. முன்னதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை ராஜ்நாத் சிங் சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து முக்கியமாக பேசப்பட்டது. 

இந்த நிகழ்ச்சி குறித்து ராஜ்நாத் சிங் கூறுகையில், 'இந்த நாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். இது இந்தியா - பிரான்ஸ் உறவின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது. இந்திய விமானப்படைக்கு ரஃபேல் இன்னும் கூடுதல் வலிமையை சேர்க்கும். விமானப்படையின் வலிமையை அதிகரிப்பதில் நாங்கள் கவனம் செலுத்துவோம்.' என்றார். 

விமானத்தை தயாரித்த நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் தொழிற்சாலை மைந்திருக்கும் போர்டியாக்ஸின் மெரினாக் பகுதியில் விழா நடைபெற்றது. இந்த இடம், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருந்து 590 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 

மொத்தம் ரூ. 59 ஆயிரம் கோடி அளவுக்கு ரஃபேல் விமானம் தொடர்பாக இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. முதல் பகுதியாக 4 ரஃபேல் போர் விமானங்கள் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் இந்தியா வந்து சேர்ந்து விடும். மற்றவை 2022 செப்டம்பருக்குள் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக ரஃபேல் குறித்து கருத்து தெரிவித்த இந்திய விமானப்படையின் தலைமை தளபதி ஆர்.கே.எஸ். பதூரியா,'ரஃபேல் போர் விமானம் மிகுந்த ஆற்றலைக் கொண்டது. அது இந்திய விமானப்படையில் இணைந்து விட்டால் நம் பலம் பல மடங்கு அதிகரிக்கும். அதனை சுகோய் 30 ரக போர் விமானம் மற்றும் மற்ற போர் விமானங்களுடன் சேர்ந்து பயன்படுத்த முடியும். அப்போது, நமது வலிமை எதிராளிக்கு மிகுந்த சவாலை கொடுக்கும்' என்றார். 

.