வேலை வாய்ப்பை உருவாக்குவதில் இந்தியா பின்தங்கியிருப்பதாக ரகுராம் கூறியுள்ளார்.
ஹைலைட்ஸ்
- ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் என்.டி.டி.வி.க்கு பேட்டி அளித்துள்ளார்
- பண மதிப்பிழப்பால் என்ன பயன் என்று கேட்கிறார் ரகுராம் ராஜன்
- வேலை வாய்ப்பு தொடர்பாக சரியான புள்ளி விவரங்கள் தேவை: ரகுராம்
New Delhi: என்.டி.டி.வி.க்கு சிறப்பு பேட்டி அளித்துள்ள ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் வேலை வாய்ப்பின்மையை போக்குவதற்கு மத்திய அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்று விமர்சித்துள்ளார்.
'தி தேர்டு பில்லர்' என்ற புத்தகத்தை ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் டெல்லியில் இன்று வெளியிட்டார். இதன்பின்னர் என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது-
வேலை வாய்ப்பு குறித்த நமது புள்ளி விவரங்கள் நீண்டகாலமாக சரியாக இல்லை. வேலை வாய்ப்பின்மையை போக்க மத்திய அரசு போதிய கவனம் செலுத்தவில்லை. வேலைக்கு இளைஞர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நீண்ட நாட்கள் ஆகின்றன. அதனால் நமக்கு கிடைத்த பலன் என்ன? பண மதிப்பிழப்பு நடவடிக்கை வேலை செய்ததா இல்லையா? அதன் நேர் மற்றும் எதிர்மறை விளைவுகள் என்ன? சிறந்த முறையில் நிர்வாகம் செய்வதற்கு ஒவ்வொரு அரசும் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
வேலை வாய்ப்பு குறித்து நம்பத் தகுந்த ஆவணங்கள் நமக்கு தேவையாக உள்ளன. நாம் ஆவணங்களில் மோசடி செய்யவில்லை என்பதை உலகிற்கு நாம் தெரிவிக்க வேண்டியுள்ளது.
வேலை தொடர்பாக நாம் வைத்துள்ள தகவல்களை மேம்படுத்த வேண்டியுள்ளது. இ.பி.எஃப்.ஓ. வைத்திருக்கும் தகவல்களை முழுமையாக நம்ப முடியாது. நாம் இன்றும் சரியான தகவல்களை சேரிக்க வேண்டியுள்ளது.
இவ்வாறு ரகுராம் ராஜன் கூறினார்.